தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, அசாதாரணமான சூழல்களில் தப்பியோடும் கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க சிறைத்துறையினருக்கு அனுமதி அளித்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேனி சிறையின் மூன்றாவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒருவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது போல் சக கைதிகள் நாடகமாடியுள்ளனர். அந்தக் கைதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி அவர்கள் கூச்சலிட்டதால், உண்மையாகவே உதவி செய்ய எண்ணிய சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்துள்ளனர்.
கதவு திறக்கப்பட்ட அடுத்த நொடியே, திட்டமிட்டபடி செயல்பட்ட 17 கைதிகளும் ஒட்டுமொத்தமாக வெளியே பாய்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் மதன்மோகன் மற்றும் காவலர் தங்கபாண்டியன் ஆகியோரைத் தாக்கி நிலைகுலையச் செய்துவிட்டு, சிறையின் பிரதான வாசல் வழியாகத் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடிய லிங்க பிரசாத் என்ற விசாரணைக் கைதி, வழியில் சென்ற ஆட்டோ ஒன்றை மறித்து அதில் ஏறியுள்ளார். பின்னர், தன்னை கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளார். மேலும், தன்னிடம் பணம் இல்லை என்றும், பயணக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த வழியாக வந்த காவலர் ஒருவர் தற்செயலாக ஆட்டோவை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் இருந்தவர் சிறையிலிருந்து தப்பியோடிய கைதி என்பது தெரியவந்தது. இதையடுத்து, லிங்க பிரசாத் உடனடியாகப் பிடிக்கப்பட்டு, அதே ஆட்டோவிலேயே மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததே கைதிகள் தப்பியோடியதற்குக் காரணம் என்றும், இது மனிதத் தவறால் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இரண்டு தலைமைக்காவலர்கள் உட்பட மொத்தம் 9 சிறைக் காவலர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் தப்பியோடியபோது சிறையில் உள்ள மத்திய சைரன் எச்சரிக்கை அமைப்பு செயல்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அண்மையில் புழல் சிறையில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, தேனி சிறையின் மின்சார வேலிகளும் பல நாட்களாகச் செயலிழந்து இருந்தது அம்பலமாகியுள்ளது. சிறையின் பாதுகாப்பு அமைப்புகள் முறையாகச் செயல்படாததும், பாதுகாப்பு நடைமுறைகள் சரிவரப் பின்பற்றப்படாததும் இந்தச் சம்பவத்தில் முக்கியக் குறைபாடுகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தப்பியோடிய கைதிகளில் பலர், மதுரை மாவட்டம் விக்ரமங்கலம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கைதிகளைப் பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 13 கைதிகள் பிடிபட்டுள்ள நிலையில், அவர்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள 4 கைதிகள் வனப்பகுதிகளில் தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைகளின் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அசாதாரணமான சூழல்களில் தப்பியோடும் கைதிகளை நிலைமைக்கு ஏற்ப துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க சிறைத்துறையினருக்கு அனுமதி அளித்து, டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
