Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

eps

அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, கடுமையான தேர்தல் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் அதிமுக உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மீது கட்சியின் மூத்த நிர்வாகி சி.வி.சண்முகம் வைத்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அதிமுகவின் எதிர்காலம் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

மூத்த பத்திரிகையாளர் இதயா இது குறித்து, ”அதிமுகவில் தேர்தல் தோல்விகள் புதிதல்ல என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்தித்த தோல்விகளுக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய தோல்விகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

ஜெயலலிதா அதிகபட்சமாக இரண்டு, மூன்று தேர்தல்களில் மட்டுமே தொடர் தோல்விகளைச் சந்தித்திருப்பார். ஆனால், தற்போதைய தலைமை தொடர்ந்து 10 முதல் 12 தேர்தல் தோல்விகளைச் சந்தித்துள்ளது. 125-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதும், பல இடங்களில் டெபாசிட் இழந்ததும் கட்சியின் வரலாற்றில் இல்லாத ஒரு பெரும் பின்னடைவு.

அதிமுக தொண்டர்கள் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஒரு ஈர்ப்புமிக்க ஆளுமையைத் தேடக்கூடியவர்கள். எடப்பாடி பழனிசாமியை ‘எளிய விவசாயி’ என்று முன்னிறுத்தினாலும், அவரால் ஒரு மக்கள் ஈர்ப்புமிக்க தலைவராக முழுமையாக உருவெடுக்க முடியவில்லை.

இதையும் படியுங்க  அதிமுக இன்பதுரையால் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்! – உளவுத்துறைக்கே சவால் விடும் கேள்வி!

தற்போது சினிமா ஆளுமையுடன் கூடிய ஒரு ‘கரிஸ்மாட்டிக்’ தலைவராக நடிகர் விஜய் அரசியலில் நுழைந்ததும், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள், இளைஞர்களின் வாக்குகள் தவெக-வை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன. திமுக, சீமான் மற்றும் பிற கட்சிகளில் இருந்தும் இளைஞர்கள் தவெக-விற்கு மாறியதே விஜய் 108 இடங்களுக்கும் மேல் பிடித்து பலம் பெறக் காரணமாக அமைந்தது.

அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்ற பெருமை இதுவரை இருந்து வந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பழனிசாமியை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளதைச் சி.வி. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இருப்பினும், இந்தியாவில் திமுக, பாமக, தேமுதிக, மதிமுக எனப் பெரும்பாலான கட்சிகளில் வாரிசு அரசியல் தடையின்றி நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு வாரிசுகள் இல்லாததால் அதிமுகவில் இந்தச் சர்ச்சை எழவில்லை. தற்போது எடப்பாடிக்கு வாரிசு இருப்பதால் அவர் தனது மகனைக் கொண்டு வர முயல்வதில் ஆச்சரியமில்லை.

நிறுவனத்தை நடத்தவும், தேர்தலுக்குப் பெரிய அளவில் நிதியைக் கையாண்டு செலவு செய்யவும் தலைவர்களுக்குத் தங்களது சொந்த வாரிசுகளின் மீதுதான் கூடுதல் நம்பிக்கை ஏற்படுகிறது. கட்சிக்காரர்கள், மக்கள் இதனை ஏற்றுக் கொண்டால் இது ஒரு பெரிய குறையாகத் தெரியாது.

இதையும் படியுங்க  "விஜய்க்கு ஒரு நீதி.. சீமானுக்கு ஒரு நீதியா?" – தமிழக அரசைத் தலை குனிய வைத்த உயர் நீதிமன்றத்தின் அதிரடி சாட்டையடி!

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவைப் போல கட்சியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களோ அல்லது ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், வைத்தியலிங்கம் போன்றவர்களோ மீண்டும் கட்சிக்குள் வருவதை அவர் முற்றிலுமாக மறுக்கிறார்.

கட்சி எவ்வளவு சிறியதாக மாறினாலும் பரவாயில்லை, அதற்குத் நானே பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக உள்ளார். இதனால் அதிருப்தியாளர்கள் பிரிந்து சென்று நீதிமன்ற வழக்குகள் மூலம் சட்டப் போராட்டம் நடத்தினாலும், பாஜகவின் மறைமுக ஆதரவு இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமியே பொதுச்செயலாளராகத் தொடர வாய்ப்புகள் அதிகம். அதிமுக வட மாவட்டங்களில் பெற்ற 47 இடங்களின் வெற்றி என்பது ‘பாமக போட்ட பிச்சை’ என்று சி.வி. சண்முகம் விமர்சித்திருப்பது ஏற்புடையதல்ல. பாமக தனித்து நின்ற போதெல்லாம் இந்த அளவுக்கு வெற்றிகளைப் பெற்றதில்லை.

உண்மையில், எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த 10.5% உள்ஒதுக்கீடு முயற்சி காரணமாக, வன்னிய சமூக மக்கள் அவர் மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பைக் கொண்டுள்ளனர். முக்குலத்தோர் வாக்குகளைப் பகைத்துக் கொண்டு எடப்பாடி தமக்காகச் செய்தார் என்ற நன்றிக்காகவே வன்னிய மக்கள் எடப்பாடி பழனிசாமிக்குத் திரளாக வாக்களித்தனர். எனவே, இது வெறும் பாமகவின் வாக்கு வங்கி மட்டுமல்ல, அதிமுகவிற்கான வன்னிய மக்களின் நேரடி ஆதரவு.

இதையும் படியுங்க  அதிமுக முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் 'செக்'..! 28 கோடி லஞ்ச வழக்கை தூசு தட்டும் த.வெ.க அரசு!

தொடர் தோல்விகள், தவெக-வின் அசுர வளர்ச்சி, உட்கட்சிக்குள்ளேயே எழும் வாரிசு அரசியல், ஆளுமை ரீதியான போர்க்கொடிகள் என எடப்பாடி பழனிசாமிக்கு முன்னால் மிகப்பெரிய சவால்கள் காத்துக் கிடக்கின்றன. இந்தத் தடைகளைத் தாண்டி அவர் அதிமுகவை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே கட்சியின் எதிர்காலம் அமையும்” எனக் கூறியுள்ளார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago