ஒருபுறம் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், மறுபுறம் முதலமைச்சர் விஜய் அமைதியாக இருந்தாலும், நிர்வாக நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், ஒரே நாளில் 200 ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், சில கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 200 டாஸ்மாக் ஊழியர்களை உடனடி நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெளிவான உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே புகார் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், முதலமைச்சரை நேரடியாக தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கவும் தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றின் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தலைமைச் செயலகத்தில் எந்நேரமும் பரபரப்பான சூழல் நிலவி வருவதாகவும், எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற நிலையில் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே டாஸ்மாக் துறையில் ஒருசிலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ஒரே நாளில் 200 பேரை பணியிடை நீக்கம் செய்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 24 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு முன்பு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த கடைகளில் பணியாற்றிய சுமார் 3,500 ஊழியர்கள் பிற கடைகளுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் 200 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
டாஸ்மாக் துறையில் மட்டுமல்லாமல், தமிழக அரசின் எந்தத் துறையிலும் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலில் பணியிடை நீக்கம், பின்னர் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் வரை செல்லும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அனைத்து துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 200 பேரை பணியிடை நீக்கம் செய்திருப்பது தற்போது தலைமைச் செயலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.
