Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ. வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் (38), சொத்துத் தகராறு காரணமாக அவரது அண்ணன் ராஜபாண்டியனால் (42) கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் செப்டம்பர் 3, 2026 அன்று அரங்கேறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மறைவுக்குப் பிறகு, அவரது முதல் மனைவியின் மகன் ராஜபாண்டியனுக்கும், இரண்டாவது மனைவியின் மகன் ராஜராஜனுக்கும் இடையே வீட்டு மனை மற்றும் சொத்துகள் தொடர்பாக நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ராஜராஜன் வசித்து வந்த வீட்டை ராஜபாண்டியன் வலுக்கட்டாயமாகப் பூட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, வீட்டின் சாவியை ராஜராஜனிடம் ஒப்படைக்குமாறு அண்மையில் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, செப்டம்பர் 2ஆம் தேதி ராஜராஜன் குடும்பத்தினரிடம் வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, செப்டம்பர் 3ஆம் தேதி காலை ராஜராஜனின் குடும்பத்தினர் வீட்டைத் திறந்து சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ராஜபாண்டியன் அங்கு வந்து ராஜராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜபாண்டியன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜராஜனை வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ஆகாஷ் கொலை வழக்கு: 28 காயங்கள்… 102 நாட்கள் போராட்டம்… சிபிசிஐடி தாக்கல் செய்த அதிரடி குற்றப்பத்திரிகை!

உயிருக்குப் பயந்த ராஜராஜன் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டுக்குள் தப்பி ஓடியுள்ளார். ஆனால், அவரை விடாமல் துரத்திச் சென்ற ராஜபாண்டியன், அந்த வீட்டுக்குள்ளும் புகுந்து ராஜராஜனை கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும், அங்கிருந்த எல்பிஜி கேஸ் சிலிண்டரை எடுத்து ராஜராஜனின் தலை மற்றும் முகத்தில் தாக்கியதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

கொலையுண்ட ராஜராஜன் வடகாடு பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். கொலைக்குக் காரணம் சொத்துத் தகராறாக இருந்தாலும், இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பப் பிரச்சினைகள் மற்றும் ஆதிக்கப் போட்டியும் இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், முதல் மனைவிக்கு ராஜபாண்டியன் மற்றும் இரண்டு மகள்களும், இரண்டாவது மனைவிக்கு ராஜராஜன் உள்ளிட்ட இரண்டு மகன்களும் உள்ளனர்.

அமைச்சரின் மறைவுக்குப் பிறகு இரு குடும்பங்களுக்கும் இடையே சொத்துகள் தொடர்பாகப் பிரச்சினை நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சொத்துகள் ஏற்கனவே இரு குடும்பத்தினருக்கும் முறைப்படி பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

இருப்பினும், ராஜராஜனுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிலும் தனக்குப் பங்கு வேண்டும் எனக் கூறி, கடந்த ஆண்டு அவரையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ராஜபாண்டியன் வீட்டைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு வீட்டின் சாவி ராஜராஜன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வீட்டைச் சுத்தம் செய்யும் பணியின்போதுதான் இந்தக் கொடூரக் கொலை நடந்துள்ளது.

இதையும் படியுங்க  "பணத்தை தொடல.. நகையை மட்டும் எடுத்தது ஏன்? சேலத்தை உலுக்கிய இரட்டை கொலை.. அதிரடியில் 4 தனிப்படைகள்!"

ராஜபாண்டியன் சாதாரண நபர் மட்டுமல்ல என்றும், அதிமுகவின் எம்.ஜி.ஆர். இளைஞர் ஜெ பேரவையின் மாநில இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கொலையைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், குற்றவாளியைக் கைது செய்யக் கோரி புதுக்கோட்டை–பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா நேரில் சென்று விசாரணை நடத்தினார். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர், குற்றவாளி கைது செய்யப்படுவார் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

வடகாடு போலீசார் ராஜபாண்டியன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ராஜபாண்டியனிடம் கொலைக்கான காரணம் மற்றும் இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜராஜனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ராஜராஜன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும், ராஜபாண்டியன் கையில் ஆயுதத்துடன் அவரைத் துரத்திச் செல்வதும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதையும் படியுங்க  அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு..! விஜய் சந்தோஷப்படணுமா..? கவலைப்படணுமா..?

இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் மற்றொரு தகவல், கொலையுண்ட ராஜராஜனின் தந்தையான முன்னாள் அமைச்சர் ஏ. வெங்கடாசலமும் இதே வடகாடு கிராமத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அவரது வீட்டிலேயே ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் என்பதுதான். தந்தை கொலை செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே கிராமத்தில் அவரது மகனும் சொந்த அண்ணனால் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சொத்துத் தகராறு மட்டும்தான் கொலைக்குக் காரணமா அல்லது வேறு பின்னணி உள்ளதா என்பது குறித்தும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்ற நபர்களின் பங்கு குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago

You missed