ஜேபிஆர் ரெமிபா எஜுகேஷனல் டிரஸ்ட்டில் (JPR Remibai Educational Trust) நடைபெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான சட்டப் போராட்டங்கள் குறித்து, முன்னாள் மேனேஜிங் டிரஸ்டியான மரியவில்சனின் சகோதரர் ஊடகவியலாளர்களிடம் அளித்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோதலின் தொடக்கம்
ஜேபிஆர் ரெமிபா எஜுகேஷனல் டிரஸ்ட்டில் பெருமளவில் நிதி முறைகேடு, வரி செலுத்தாததால் இன்கம் டாக்ஸ் பிரச்சினைகள் மற்றும் வங்கியால் சொத்துக்கள் ‘நான்-பெர்ஃபார்மிங் அசெட்’ என அறிவிக்கப்பட்டது போன்ற சிக்கல்கள் எழுந்தன .
இதற்காக 2022 ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி இரண்டு இடைக்காலத் தடை உத்தரவுகளை பெற்றதாக அவர் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவு வந்த நான்கே நாட்களில் (ஆகஸ்ட் 8, 2022), மரியவில்சன் தரப்பினர் தம் மீதும் தங்களது மனைவி மீதும் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

குழந்தையைக் கடத்தி மிரட்டல்
2022 டிசம்பர் மாத வாக்கில், சேலம் நீதிமன்றம் மூலம் தத்து எடுக்கப்பட்ட தங்களது குழந்தையை எடுத்துச் சென்று வைத்துக் கொண்டு, டிரஸ்ட் முறைகேடு வழக்குகள், தாக்குதல் தொடர்பான எஃப்.ஐ.ஆர்-களை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாகத் தெரிவித்தார்.
வேறு வழியின்றி 2023 மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததாகவும், ஏப்ரல் 2023-ல் நீதிமன்றத் தலையீட்டின் மூலம் குழந்தை மீட்கப்பட்டுத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
போலி வழக்குகள்- தொழில்கள் முடக்கம்
குழந்தையை மீட்ட பிறகு, புதுச்சேரி மற்றும் சிபிசிஐடி மூலம் தங்கள் மீது தொடர்ச்சியாகப் போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.
சில அதிகாரிகளின் தலையீட்டால் புதுச்சேரியில் இயங்கி வந்த தங்களது தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயமாக மூடி முடக்கப்பட்டன. இதனால் குடும்பத்துடன் தமிழகம், துபாய்க்குச் சென்று தலைமறைவாக வாழ வேண்டிய சூழல் உருவானதாகவும், பின்னர் நீதிமன்றங்கள் மூலம் முன்ஜாமீன் பெற்று அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொண்டதாகவும் விளக்கமளித்தார்.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்”
தங்களுக்குப் பின்னால் அரசியல் சக்திகளோ அல்லது வேறு நபர்களோ இருந்து இயக்கி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக மறுத்தார். தாம் வழக்கறிஞராக பயின்ற சட்ட மாணவர் என்பதால், நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துத் தனி ஆளாகப் போராடி வருவதாகத் தெரிவித்தார். 2025 மார்ச் மாதத்திலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு வாங்கியதாகவும், சட்டப்பூர்வமான சமரசங்களுக்கு உட்படாமல் நீதிமன்றம் மூலமே தீர்வுகாண விரும்புவதாகவும் கூறினார்.
“அரசனோ, சாமானியனோ சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று கூறிய அவர், நீதிமன்றத்தில் மரியவில்சன் நேரில் ஆஜரானதைச் சுட்டிக்காட்டி, இது தங்களது நீண்டநாள் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி எனக் கூறினார்.
