சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தனியாக வசித்து வந்த முதிய தம்பதியினர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொள்ளைக்காக இந்தக் கொலை நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்திற்குட்பட்ட காடையாம்பட்டி அருகே உள்ள குண்டுக்கல் ஊராட்சி ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (85). இவரது மனைவி அமராவதி (70). முதிய தம்பதியினரான இவர்கள் தென்னை மட்டை பின்னும் தொழிலை மேற்கொண்டு, அப்பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், முதிய தம்பதியினரை கட்டையால் தலையில் சரமாரியாகத் தாக்கி மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு, வீட்டில் இருந்த சில நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வழக்கம்போல் முதிய தம்பதியினருக்கு உணவு வழங்குவதற்காக அவர்களது பேரன் நவநீதன் வீட்டிற்குச் சென்றபோது, ஜெயராமனும் அமராவதியும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் காடையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த இரட்டை கொலைச் சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. ரம்யா பாரதி, சேலம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் ஆகியோர் நேரில் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கொலை நடைபெற்ற விதம், வீட்டின் நிலைமை மற்றும் சுற்றுப்புற சூழலை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீட்டில் இருந்த பொருட்கள், தடயங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைத்த ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் நோக்கில், டிஎஸ்பி சஞ்சீவ்குமார் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் சண்முகம், பெரியசாமி, மகேந்திரன் மற்றும் அங்கப்பன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த அமராவதி அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் எடையுள்ள தங்கத் தோடு மற்றும் மூக்குத்திகள் காணாமல் போயுள்ளன. அவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதேநேரத்தில், வீட்டில் இருந்ததாகக் கூறப்படும் சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையர்கள் எடுக்காமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இதனால், இந்தக் கொலை முழுக்க முழுக்க நகைக்காக நடைபெற்ற கொள்ளையா அல்லது முன்விரோதம் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற இருவேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள், சந்திப்புகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமரா காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற வாகனங்கள் மற்றும் நபர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, குற்றவாளிகளை எந்தவித தாமதமும் இன்றி விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தனியாக வசித்து வந்த முதிய தம்பதியினர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், அப்பகுதி மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
