Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் மாற்றப்படுவார் என்ற தகவல்கள் ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன. அவருக்குப் பதிலாக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நியமனம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொடராமல் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த முக்கிய தலைவர்களில் மாணிக்கம் தாகூரும் ஒருவர். அவரது இந்த நிலைப்பாடு அப்போது கட்சிக்குள் பரவலாக விவாதிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றி கழக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. அந்த அரசியல் முடிவிலும் மாணிக்கம் தாகூரின் பங்கு முக்கியமானதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜயுடன் அவருக்கு நெருக்கமான அரசியல் உறவு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதையும் படியுங்க  அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு..! விஜய் சந்தோஷப்படணுமா..? கவலைப்படணுமா..?

இதற்கிடையில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் கட்சியின் ஒரு தரப்பிலிருந்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக அவரை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

சமீபத்தில் செல்வப்பெருந்தகை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தேசியத் தலைமை தெரிவித்ததாக கூறப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை தலைமையிலேயே காங்கிரஸ், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தலைமை மாற்றம், தமிழக காங்கிரஸின் எதிர்கால அரசியல் திசை மற்றும் கூட்டணி அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படியுங்க  ஆட்சியின் முதல் மாதத்திலேயே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… விமர்சன வலையில் அமைச்சர்கள்!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago