Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த 27 வயது புதுமணப் பெண் ரிதன்யாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது தந்தை அண்ணாதுரை கண்ணீருடன் தமிழக அரசிடம் நீதி கோரிக்கை விடுத்துள்ளார்.

“என் மகள் இனி உயிருடன் திரும்பி வரமாட்டாள். ஆனால், அவளுக்கு நடந்த கொடுமை இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் இந்த சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறேன்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அவர்களின் ஜாமீனை ரத்து செய்து, முறையான விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், “என் மகள் இறப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலமும், அனுப்பிய ஆடியோ பதிவுகளும் இந்த வழக்கின் மிக முக்கிய ஆதாரங்கள். அவற்றின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அந்த தண்டனை, இனி எந்த பெண்ணும் இதுபோன்ற வரதட்சணை கொடுமைக்கு ஆளாகாத வகையில் சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும்,” என்றார்.

இதையும் படியுங்க  பெற்றோரே மறக்காதீங்க! நாளை உங்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து!

தமிழகத்தில் பெண் குழந்தைகளை தெய்வமாகக் கருதி மதிக்கும் பண்பாடு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “தங்களின் சொத்து, சுகம் அனைத்தையும் தியாகம் செய்தாவது மகள் நன்றாக வாழ வேண்டும் என்பதே ஒவ்வொரு தந்தையின் கனவு. ஆனால், என் மகளின் வாழ்க்கை வரதட்சணை கொடுமையால் பறிக்கப்பட்டது. அந்த வேதனை இன்று வரை மறையவில்லை,” என உருக்கமாகப் பேசினார்.

ரிதன்யா உயிரிழப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு அனுப்பிய ஏழு வாட்ஸ்அப் ஆடியோ பதிவுகளில், “அப்பா… என்னால் இந்த சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. அவர்கள் என் வாழ்க்கையை அழிக்கத் திட்டமிட்டுவிட்டார்கள். நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை,” என்று கதறி அழுதிருந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதிலிருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும் அண்ணாதுரை குற்றம்சாட்டினார்.

“இந்த வழக்கை எஸ்.பி. நிலை அதிகாரி தலைமையில் மறுவிசாரணை நடத்தி, புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறேன். தற்போது வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் உள்ளது. இன்னும் விசாரணை தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்காக காத்திருக்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  "சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்: மனைவியைக் கொன்று, உடலை எரித்துச் சாம்பலைக் கிணற்றில் கரைத்த கணவன்!"

ரிதன்யாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கவின்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 100 பவுன் நகை மற்றும் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வோல்வோ கார் உள்ளிட்ட வரதட்சணை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்ந்து மனு அளித்து வருகிறார்.

“என் மகளுக்கான நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை,” என்று அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

ரிதன்யா மரண வழக்கு தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்களிடையிலும் தொடர்ந்து நீதி கோரும் குரல்கள் எழுந்து வரும் நிலையில், இந்த வழக்கில் விரைவாகவும், நியாயமான முறையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.

இதையும் படியுங்க  "கோழி எடையில் அரங்கேறும் ரகசியம்!  ஜூலை 31 முதல் 60,000 சிக்கன் கடைகள் அதிரடி மூடல்!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago