Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ்நாடு – புதுச்சேரியில் ஜூலை 31 முதல் காலவரையற்ற சிக்கன் விற்பனை நிறுத்தம்? – தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 முதல் கறிக்கோழி (சிக்கன்) விற்பனையை காலவரையறையின்றி நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாநிலம் முழுவதும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிக்கன் கடைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அசைவ உணவுப் பிரியர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த முக்கிய முடிவு தொடர்பாக, தஞ்சாவூரில் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கோழி வணிகர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

கூட்டத்தில் முக்கியமாக, விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தது 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நடைமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையும் படியுங்க  "1 கோடி மாமூல் மிரட்டலா? போலி நகை விவகாரமா? தூத்துக்குடியை அதிரவைத்த இசக்கி ராஜா கைது!"

தற்போது, கோழிகளை விற்பனைக்கு அனுப்பும் வரை தொடர்ந்து தீவனம் வழங்கப்படுவதால், கோழிகளின் எடை செயற்கையாக அதிகரிக்கப்படுகிறது என்று வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், உடலில் ஜீரணமாகாமல் தங்கும் தீவனம் பின்னர் கழிவுகளாக வெளியேறுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதோடு, பொதுமக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறையை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்தே, ஜூலை 31 முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க  “ராஜினாமா செய்த தொகுதிக்கு மீண்டும் விஜய் விஜயம்… நன்றி நிகழ்ச்சி ஏற்பாடு!”

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 12 லட்சம் கறிக்கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மாதந்தோறும் சுமார் 15.5 கோடி கறிக்கோழிகள் விற்பனையாகின்றன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 10 லட்சம் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வேலைநிறுத்தத்தால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை தாங்கள் நன்கு அறிந்திருப்பதாகவும், “வேறு வழியின்றி இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களிடமும், உணவக உரிமையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், கோழி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கோழிப்பண்ணைகளுக்கு அரசு தெளிவான தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் (Standard Operating Procedures – SOP) வகுத்து அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், விவசாய மற்றும் கோழிப்பண்ணை அமைப்புகள் முக்கிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளன.

இதையும் படியுங்க  முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.. நடந்தது என்ன?

அதில், சிக்கன் விற்பனை நிறுத்தம் என்பது தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ள தன்னார்வ வேலைநிறுத்தப் போராட்டம் (Voluntary Protest) மட்டுமே. இது அரசின் உத்தரவு அல்லது அரசால் விதிக்கப்பட்ட தடை அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசு மற்றும் வணிகர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு எட்டப்பட்டால், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வார இறுதி நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் உணவுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் சூழலில், ஜூலை 31 முதல் கடைகள் மூடப்பட்டால் பிரியாணி உள்ளிட்ட சிக்கன் உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் அல்லது விலை உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இதனால், அரசு விரைந்து தலையிட்டு வணிகர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் சுமூகமான தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago