மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காக சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் உத்தரவின்பேரில், சிறப்பு காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த சிவியோன் ராஜ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரை காளவாசல் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்த அவர், வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, அவற்றை போதைப் பொருளாக பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், அவருடன் கல்லூரியில் படித்து வந்த செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த லோகபாண்டி, நந்தகுமார், சென்னன், சுபாஷ், விஷால் ஆகியோரின் உதவியுடன், 3,000 ரூபாய்க்கு வாங்கிய வலி நிவாரண மாத்திரைகளை 8,000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வந்ததாகவும், விற்பனையின் போது பாதுகாப்பிற்காக ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட ஏர் கன் துப்பாக்கி, ஆறு வாள்கள், இரண்டு கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போதை நோக்கத்திற்காக வலி நிவாரண மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த ஆறு பேரை செக்கானூரணி காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 680 வலி நிவாரண மாத்திரைகள், ஒரு ஏர் கன் துப்பாக்கி, ஆறு வாள்கள், இரண்டு கத்திகள், ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்ட இந்த சம்பவம், மதுரை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
