கேரளத்தில் காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் அடித்துக் கொண்டே டெல்லியில் அண்ணன் -தம்பியாக மாறுவதைப் போல தமிழ்நாட்டின் திமுக ஏன் தவெக-வுடன் கைகோர்க்கக் கூடாது என்ற புதுக்குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். இந்த கேரள மாடல் விவாதம் ஒரே நேரத்தில் திக்கு முக்காட வைத்திருக்கும் நிலையில், பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் வீசப்பட்ட இந்த அட்வான்ஸ் வியூகம் தமிழக தேர்தல் களத்தில் சாத்தியமா? அல்லது தவெகவிடம் செல்லும் விசிக தனது சொந்த ஓட்டு வங்கியை காப்பாற்றிக்கொள்ள திருமா போடும் முன்கூட்டியே ரூட் மேப்பா?
விசிக தலைவர் திருமாவளவன் கொளுத்திப் போட்ட கேரள மாடல் அஸ்தரம் அறிவாலயத்தையும், பனையூரையும் ஒரே நேரத்தில் யோசிக்க வைத்திருக்கிறது என்றாலும் தமிழ்நாட்டின் தரைமட்ட கிரவுண்ட் ரியாலிட்டியில் திமுக -தவெககூ ட்டணி என்பது இப்போதைக்கு நெருப்பும், தண்ணீரும் ஒன்று சேர்வது போலத்தான். கட்சி தொடங்கியது திமுகவின் குடும்ப அரசியலுக்கும் ஊழலுக்கும் மாற்று நங்கள் தான் என்ற ஒற்றை முழக்கத்தோடு தான். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக வெற்றிக்கழகத்தின் அஸ்திவாரம்.

அப்படி இருக்கும் சூழலில் டெல்லி மேலிட அரசியலுக்காக ஆரம்பத்திலேயே திமுகவுடன் தேசிய அளவில் கைகோர்த்தால் தமிழ்நாட்டில் தவெக கட்டமைக்க நினைக்கும் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அப்படியே சிதறிவிடும். விஜய் எதை எதிர்த்து அரசியல் களத்திற்கு வந்தாரோ அவர்களுடனே அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார் என்ற விமர்சனம் எழுந்தால் அது தவெகவின் அரசியல் எதிர்காலத்தை மொத்தமாக காலி செய்துவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மறுபக்கம் திமுகவும் தவெகவை ஒரு அரசியல் எதிரியாகத்தான் பார்க்கிறது. பாஜகவை நோக்கி ஒட்டுமொத்த தமிழ்நாடும் கேள்வி எழுப்பிய போது தவெக ஏன் மௌனம் காத்தது? என்பதுதான் திமுகவின் பிரதான குடைச்சல். பின்னணியில் பாஜகவின் நிழல் இருக்கிறதோ? என்ற ஒரு சந்தேகம் இன்னும் அறிவாலயத்திற்கு தீரவில்லை. இந்த சூழலில் திமுகவும், தவெகவும் சேர்ந்தால் என்ன தவறு? என்று விசிக தலைவர் திருமாவளவன் கொளுத்திப் போட்டு இருக்கும் திரி அறிவாலயத்திலும் பனையூரிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு ஆழமான அரசியல் பார்வையும், புரிதலும் வேண்டும் என்று நெற்றிப்போட்டில் அடித்தார் போல் பேசும் திருமாவளவன் சொல்லும் உதாரணங்கள்தான் ஹைலைட். கேரளாவில் காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் மாநில அளவில் பரம எதிரிகள். ஆனால் டெல்லி என்று வந்துவிட்டால் இரண்டு கட்சிகளுமே இந்தியா கூட்டணியின் முக்கிய தூண்கள். தமிழ்நாட்டிலும் அதை அப்ளை செய்யச் சொல்கிறார் திருமாவளவன். ”பிஜேபியை எதிர்க்கணும்? அதைத்தான் தவெக சொல்கிறது. எங்கள் கொள்கை என தவெக எதிர்க்கிறது. அதே எதிரியான பாஜகவை திமுக தொடர்ந்து எதிர்க்கிறது. இந்தியா க்கூட்டணி என்ன சொல்கிறது? அவர்களை எதிர்ப்பதுதான். அப்படியானால் ஏன் இவர்கள் ஒரே அணிக்கு வரக்கூடாது?” இதுதான் திருமாவளவன் எழுப்புகிற கேள்வி.
தேவைப்பட்டால் திமுக, தவெக இடையே அரசியல் பாலமாக மாறி தமிழக அரசியலில் கிங்மேக்கராக உருவெடுப்பதே திருமாவின் மாஸ்டர் பிளான் என்பது அரசியல் வட்டாரங்களின் கணிப்பு. சுருக்கமாகச் சொன்னால் இது தவெகவுக்கோ, திமுகவுக்கோ போட்ட தூது அல்ல. எதிர்காலத்தில் விசிகவின் பலத்தையும், வாக்கு வங்கியையும் பாதுகாத்துக் கொள்ள திருமா இப்போதே போட்டு வைக்கும் முன்னெச்சரிக்கை ரூட் மேப் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஒருவேளை திருமாவளவன் முன்வைத்திருக்கும் இந்த கேரள மாடல் தியரி சாத்தியமானால் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுகவின் வேட்பாளரும் இருப்பார். தவெகவின் வேட்பாளரும் இருப்பார்.
இதனால் பாரம்பரியமாக விழும் திமுக எதிர்ப்பு வாக்குகள் மற்றும் நடுநிலை ஓட்டுகள் அப்படியே தவெக பக்கம் மாறும். இது திமுகவின் வெற்றியை பல தொகுதிகளில் கடுமையாக பாதிக்கும் என்று விமர்சகர் எச்சரிக்கிறார்கள். தவெகவும், திமுகவும் தனித்தனியாக மோதிக் கொள்ளும் போது வாக்குகள் சிதறி அதன் பலன் அதிமுக அல்லது பாஜக கூட்டணிக்கு சாதகமாக முடியும் அபாயம் இருக்கிறது என்பதும் அரசியல் நிபுணர்களின் கருத்து. தேர்தல் முடிந்து இந்த இரண்டு அணிகளில் இருந்து யார் ஜெயித்து டெல்லிக்கு சென்றாலும் அந்த 40 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் கீழ் ஒன்றாக அமர்வார்கள்.
டெல்லியில் பல விகாரங்களில் பாஜகவுக்கு எதிராக ஒரே அணியாக ஓட்டு போடுவார்கள். ஆனால் டெல்லியில் பாஜகவை வீழ்த்த இந்த 40 எம்பிக்களின் பலம் பயன்படுமே தவிர, தமிழ்நாட்டில் இதனால் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே இருக்கும் பகை அணு அளவும் குறையாது. மாறாக, அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான யுத்த களம் இன்னும் உக்கரமாகும் என்று விமர்சகர்கள் அடித்துச் சொல்கிறார்கள். திருமாவின் இந்த அட்வான்ஸ் அரசியல் கணக்குக்கு திமுக தரப்பிலிருந்து உடனே ரியாக்ஷன் வந்திருக்கிறது. ”தவெக தங்களுடைய முதன்மை எதிரியாக திமுகவை தான் பார்க்கிறது. அப்படி இருக்கும்போது இது எப்படி சாத்தியம்?

தவெகவின் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்துதான் திருமாவளவனின் கருத்தையே பரிசீலிக்க முடியும் என்று கறாராக கையை விரித்து இருக்கிறது திமுக. பாஜகவை தவெக வலிமையாக கடுமையாக எதிர்த்தால் அப்பொழுது காங்கிரஸ் விசிக சொல்வதை நாங்கள் கருத்தில் கொள்வோம் என்கிறது திமுக. தமிழத்தில் வெட்டுக்குத்து அரசியல். டெல்லியில் கட்டிப்பிடி வைத்தியம் இதுதான் திருமாவளவன் முன் மொழியும் கேரளா மாடல். ஆரம்பத்திலேயே திமுகவை தீய சக்தி ரேஞ்சுக்கு தவெக விமர்சிப்பதும், தவெகவை பாஜகவின் பி டீம் என திமுக சந்தேகப்படுவதும் இந்த பார்முலாவுக்கு இப்போதைக்கு ரெட் சிக்னல் காட்டுகிறது.
த.வெ.க ஆட்சியில் தாறுமாறாக எகிறிய கரண்ட் பில்… சத்தமே இல்லாமல் கொள்ளை..! அலறும் பொதுமக்கள்!
ஆழமான அரசியல் பார்வை திருமாவளவனுக்கு இருக்கலாம். ஆனால், தவெக- திமுக இடையே இப்போதைக்கு நோ என்ட்ரி போர்டு தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
