தமிழக அரசியல் களம் தினமொரு திருப்பத்தைச் சந்தித்து வரும் நிலையில், கோட்டை வட்டாரங்களை அதிர வைக்கும் மற்றொரு புதிய ஹாட் அரசியல் தகவல் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியுள்ளது. 2026 பிப்ரவரி மாத இறுதியில் அதிமுகவில் இருந்து விலகி, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இப்போது திமுகவிலிருந்து விலகி தவெக இணையப் போகிறாரா? என்ற விவாதம் அரசியல் அரங்கில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
சமீபத்தில் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுகவின் முக்கிய அங்கமாக இருக்கும் ஓ.பி.எஸ், மீண்டும் ஒரு அரசியல் ‘தர்மயுத்த’ அஸ்திரத்தை கையில் எடுத்து பனையூர் நோக்கி நகரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓராண்டுக்குள் முட்டிக்கொண்ட முரண்?
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் ஒடுக்கப்பட்டு, பாஜக கூட்டணியிலும் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காத நிலையில்தான், ஓ.பி.எஸ் தனது அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ள கடந்த பிப்ரவரியில் திமுக என்ற ‘தாய் கழகத்தை’ நாடினார். ஆனால், ஓ.பி.எஸ் போன்ற ஒரு சீனியர், முக்குலத்தோர் சமூகத்தின் முகத்திற்கு, திமுகவின் தற்போதைய கட்டமைப்பில் பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற அதிருப்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது.
மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு, திமுகவின் கீழ்மட்ட அல்லது நடுத்தர தலைவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் போதவில்லை என்கிற மனக்குறை ஓ.பி.எஸ்-ஸுக்கு இருப்பதாகத் தெரிகிறது.
தவெக-வின் தென்மண்டல ‘டார்க்கெட்’
தற்போது தமிழக அரசியல் தளத்தில் இமாலய பலத்தோடு வளர்ந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக, தென் மாவட்டங்களில் தங்களது வாக்கு வங்கியை அசுரத்தனமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஓ.பி.எஸ் போன்ற பெரிய சமூகப் பின்னணி கொண்ட, அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் கிடைத்தால் அது தவெக-வுக்குப் பெரும் பலமாக மாறும்.
முதல்வர் விஜய் தற்போதைய சூழலில், மிகத் துணிச்சலாக 25 தொகுதிகளில் இடைத்தேர்தலைக் கொண்டு வந்து, அதில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை வாரிச்சுருட்டி தனது ஆட்சியைத் தனிப் பெரும்பான்மை கொண்ட இரும்புக்கோட்டையாக மாற்ற மாஸ்டர் பிளான் போட்டு களம் காண்கிறார்.
தென் மண்டல தளபதி
தென் மாவட்டங்களில் குறிப்பாக தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை பெல்ட்களில் ஓ.பி.எஸ்-ஸுக்கு இருக்கும் செல்வாக்கை தவெக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்பலாம். இப்போதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் மீது அதிருப்தியில் இருக்கும் லட்சக்கணக்கான ஓபிஎஸ் ஆதரவுத் தொண்டர்களை அப்படியே தவெக-வின் கூடாரத்திற்குள் கொண்டு வர ஓ.பி.எஸ் ஒரு பாலமாக அமையக் கூடும்.
தவெக-வில் ஓபிஎஸ் செட் ஆவாரா?
அதே நேரத்தில், இந்தத் தகவல் வெறும் அரசியல் யூகமா? அல்லது நிஜமா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ஏனென்றால், “பழைய முகங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள், அடிக்கடி கட்சி மாறும் பிம்பம் கொண்ட மூத்த தலைவர்களை விட, புதிய, கறைபடியாத இளைஞர்களுக்கே தவெக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அதிமுகவில் இருந்து திமுக, இப்போது திமுகவில் இருந்து தவெக என ஓ.பி.எஸ் மாறினால், அது அவரது அரசியல் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதால் அவர் இந்த முடிவை மிகத் தீவிரமாக யோசித்தே எடுப்பார்.
தமிழக அரசியலின் அடுத்த அதிரடி!
திமுக-வில் தனது அரசியல் வாரிசுகளின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கவலை ஒருபுறம், தவெக-வில் இணைந்தால் மீண்டும் கிங் மேக்கராக மாறலாம் என்கிற ஆசை மறுபுறம் என ஓ.பி.எஸ் தரப்பில் ரகசிய ஆலோசனைகள் நடந்து வருவதாக நெட்டிசன்களும், அரசியல் விமர்சகர்களும் பதிவிட்டு வருகின்றனர். ஒருவேளை ஓ.பி.எஸ் தனது எம்.எல்.ஏ பதவியைத் துறந்து, திமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்தால், அது ஏற்கனவே தவெக திட்டமிட்டுள்ள ‘25 தொகுதிகள் இடைத்தேர்தல்’ மெகா பிளானுக்கு மேலும் பெரிய அரசியல் வெடிமருந்தாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
