புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா அரசு மருத்துவமனையில், நெஞ்சுவலியுடன் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு பாதுகாப்புப் பணியாளர் (Security) ஒருவர் ECG பரிசோதனை மேற்கொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வரும் இந்த அரசு மருத்துவமனையில், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலை பல ஆண்டுகளாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவப் பயிற்சி பெறாத பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் நோயாளிக்கு ECG கருவிகளைப் பொருத்தி பரிசோதனை செய்வது போன்ற காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அந்த வீடியோவில், அவர் ECG பரிசோதனையை மேற்கொண்டு, அதன் அறிக்கையையும் எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவம் குறித்து நோயாளியின் உறவினர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களோ அல்லது தகுதியான செவிலியர்களோ இல்லாததால், பாதுகாப்புப் பணியாளர் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதே அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு, சமையல் கூடத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்த நோயாளிக்கு தையல் போடுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, ECG பரிசோதனையை செவிலியர்தான் மேற்கொண்டார். இரவு நேரம் என்பதால், செவிலியருக்கு உதவியாக பாதுகாப்புப் பணியாளர் உடன் சென்றார். அவர் தனியாக ECG எடுக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
எனினும், பொதுமக்களின் உயிருடன் தொடர்புடைய அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது குறித்து மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகிறது.
