திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகியும், திரையுலகில் அநீதிகளுக்கு எதிராக எப்போதும் ஓங்கி ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரருமான கே.ராஜன், கடந்த மே 17ஆம் தேதி அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகை உலுக்கியுள்ளது. அவரது இந்த அதிரடி முடிவின் பின்னணியில் உள்ள மர்மங்களை உடைக்கக் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கடைசி நிமிட போன் கால்கள்
யாரும் எதிர்பாராத விதமாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில், கே.ராஜன் வீட்டில் இருந்த அவரது தனிப்பட்ட டைரி குறிப்புகளைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் கடந்த சில மாதங்களாக அழுது தீர்த்த துயரங்களும், பண நெருக்கடிகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
அவர் உயிரிழப்பதற்கு முன் கடந்த 48 மணி நேரத்தில் யார் யாருக்கெல்லாம் போன் செய்தார்? யாரிடமெல்லாம் உதவி கேட்டார்? யார் அவரை மிரட்டினார்கள் என்ற விபரங்களைச் சேகரிக்க அவரது செல்போனின் சிடிஆர் (Call Detail Record) அறிக்கையையும் சைபர் க்ரைம் போலீஸார் கையில் எடுத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கே.ராஜனிடம் சுமார் 20 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவரை நம்ப வைத்து ஏமாற்றிய ஒரு கும்பல் குறித்துப் பரபரப்புத் தகவல்கள் வெளிவந்துள்ளன. திரைப்படத் தயாரிப்பு அல்லது பெரிய அளவிலான தொழில் முதலீடு என்ற பெயரில் இந்த தொகை கைமாறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்கப் போன இடத்தில், ராஜனுக்குப் பல தரப்பிலிருந்து மிரட்டல்களும், ஏமாற்றங்களுமே மிஞ்சியதாகக் கூறப்படுகிறது.
கடன் சுமை, ஏமாற்றப்பட்ட விரக்தி ஒருபுறமிருக்க, அவரை இந்த விபரீத முடிவை நோக்கித் தள்ளிய நபர்கள் யார் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ராஜனின் டைரியில் குறிப்பிட்டுள்ள பெயர்கள், அவரது கடைசி போன் கால்களில் சிக்கிய முக்கியப் புள்ளிகள் விரைவில் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளனர்.
நேர்மையான தயாரிப்பாளராக அறியப்பட்ட கே.ராஜனை 20 கோடி ரூபாய் வரை ஏமாற்றி, தற்கொலைக்குத் தூண்டிய கும்பல் யார் என்பது இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
