‘கருப்பு’ திரைப்படத்தின் படக்குழு இசைஞானி இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்ட காட்சி தற்செயலாக இடம்பெற்றது என தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அதில் இசைஞானி இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்ட காட்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காப்பீடு தொடர்பான காட்சியில் இளையராஜாவின் பெயரை பயன்படுத்தி பேசப்பட்ட வசனம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி செய்தியை வெளிப்படுத்தும் நோக்கில் தற்செயலாக சேர்க்கப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்து வரும் இசை அரசனை காயப்படுத்தும் நோக்கம் படக்குழுவுக்கு எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நோக்கம் இல்லாமல் இடம்பெற்ற அந்த காட்சியால் இசைஞானி இளையராஜாவிற்கும், அவரது ரசிகர்களுக்கும் அல்லது யாருக்கும் மனவேதனை ஏற்பட்டிருந்தால் அதற்காக தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக படக்குழு கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக வரவேற்பைப் பெற்று வரும் இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் பெயர் இடம்பெற்றது விமர்சனத்திற்குள்ளாகிய நிலையில், அதற்கான விளக்கத்தை தற்போது படக்குழு வழங்கியுள்ளது.
