https://republictn.com/

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியுள்ள ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த ‘சிக்மா’ திரைப்படம், தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தை விஜய்யின் திரைப்படமும், மகன் ஜேசன் சஞ்சயின் முதல் இயக்குநர் படமும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகி நேரடியாக பாக்ஸ் ஆபீஸில் மோதும் சூழலைத் தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, பெரும்பாலான முக்கிய திரையரங்குகள் அந்தப் படத்திற்கே ஒதுக்கப்பட உள்ளன. இதனால், அடுத்த வாரமே ‘சிக்மா’ வெளியானால் போதுமான திரையரங்குகளும், காட்சிகளும் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வசூலையும், ஜேசன் சஞ்சயின் முதல் இயக்குநர் படமான ‘சிக்மா’வின் வசூலையும் ஒப்பிட்டு தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும் சூழலைத் தவிர்க்கவும் இந்த ரிலீஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம், கொள்ளைச் சம்பவம் மற்றும் புதையல் வேட்டையை மையமாகக் கொண்ட திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

‘சிக்மா’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago