பல வாரங்களாகப் பெரிதும் பேசப்பட்டு வந்த அரசியல் நகர்வை, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இறுதியாக மேற்கொண்டுள்ளார். பாஜகவிலிருந்து விலகி, தனது ‘வி தி லீடர்ஸ்’ என்ற தளத்தை விரிவுபடுத்தி ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இது எதிர்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு முழுமையான அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இயக்கத்தின் கட்டமைப்பு, தேர்தல் செயல்பாட்டுத் திட்டங்கள் இப்போது தெளிவாகி வரும் நிலையில், அண்ணாமலைக்கு முன்னால் உள்ள பெரும் சவால்களை அவரால் முறியடிக்க முடியுமா? என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. அவரது பலங்கள், சவால்களை நாம் இப்போது அலசிப் பார்ப்போம்.
தனிப்பட்ட செல்வாக்கு
தமிழகத்தில் அண்ணாமலையைப் போல மிக விரைவான அரசியல் வளர்ச்சியைப் பெற்றவர்கள் வெகு சிலரே. பிரதமர் நரேந்திர மோடியால் ஈர்க்கப்பட்ட அண்ணாமலை, ஐபிஎஸ் பணியிலிருந்து விலகி 2020-ல் பாஜகவில் இணைந்தார். ஓராண்டுக்குள்ளேயே அவர் கட்சியின் தமிழகத் தலைவராக உயர்ந்தார்.
சிறந்த பேச்சாற்றல், துடிப்பான பிரச்சார பாணி, சமூக ஊடகங்களில் வலுவான இருப்பு ஆகியவற்றைக் கொண்டு, தமிழகத்தில் பாஜகவின் பிம்பத்தை மாற்றியமைப்பதில் அவர் வெற்றி பெற்றார். தேர்தல் ரீதியாகக் கட்சி பலவீனமாக இருந்தபோதிலும், திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலத்தில், பாஜகவை முக்கிய அரசியல் விவாதங்களின் ஒரு பகுதியாக அண்ணாமலை மாற்றினார்.
தமிழ்நாட்டில் பாஜக-வின் ஆதரவுத் தளத்தை விட, அண்ணாமலைக்கு இன்று தனிப்பட்ட ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை விமர்சகர்கள் கூட ஒப்புக்கொள்கிறார்கள்.
பாஜக முத்திரையிலிருந்து விடுதலை
முரண்பாடாகத் தோன்றினாலும், பாஜக-விலிருந்து விலகியது அண்ணாமலையின் மிகப்பெரிய அரசியல் பலமாக அமையலாம். தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஒரு பெரிய பிரிவினரிடையே பாஜக தொடர்ந்து எதிர்ப்பைச் சந்தித்து வருவதால், அக்கட்சியின் முத்திரை அவரது வளர்ச்சியை மட்டுப்படுத்தியதாகப் பல ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக வாதிட்டு வந்தனர். ஒரு தனி இயக்கத்தைத் தொடங்குவதன் மூலம், அவரைத் தனிப்பட்ட முறையில் விரும்பிய அதே சமயம் பாஜக-வை ஆதரிக்க விரும்பாத வாக்காளர்களை அண்ணாமலையால் இப்போது ஈர்க்க முடியும்.
அரசியல் வெற்றிடம்
அண்ணாமலையின் இந்த நகர்வுக்கான காலமும் அவருக்குச் சாதகமாக அமையலாம். தமிழக அரசியல் முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. விஜய் தலைமையிலான தவெக எழுச்சி பெற்றுள்ளதன் மூலம், மாற்று அரசியலை ஏற்றுக்கொள்ள வாக்காளர்கள் தயாராக இருப்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் ஒரே நேரத்தில் ஆட்சியில் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் மாற்றம், புதிய சக்திகளுக்கும் புதிய அரசியல் முன்னெடுப்புகளுக்கும் ஒரு களத்தை அமைத்துத் தந்துள்ளது.
கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு
கூட்டணிக் கட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வதற்குப் பதிலாக, அவர்களுக்கு அதிகாரத்தில் பங்களிப்பை வழங்குவதன் மூலமும் அண்ணாமலை பயனடைய முடியும். பாரம்பரியக் கட்சி அமைப்புகளைப் போலன்றி, புதிய தலைவர்களை உருவாக்குதல், வாய்ப்புகளைப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு மாதிரியை அவர் முன்வைப்பதாகத் தெரிகிறது. திராவிடக் கட்சிகளின் படிநிலைகளில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கருதும், லட்சியம் கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்களை இது ஈர்க்கக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இது வெற்றியடைந்தால், சிறிய கட்சிகள் மற்றும் வளர்ந்து வரும் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க அவருக்கு இது உதவும்.
கட்சி தொடங்குவதற்கு முன்பே அடித்தள அளவிலான அமைப்பு உருவாக்கம்
தனிநபர் பிம்பத்தை மட்டுமே மையமாகக் கொண்டு தொடங்கப்படும் பல அரசியல் முயற்சிகளைப் போலன்றி, விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் செய்ததைப் போலவே, அண்ணாமலையும் ஒரு அரசியல் கட்சியை அறிவிப்பதற்கு முன்பே வலுவான அமைப்பு கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார். ‘wetheleaders.org’ இணையதளம் மூலம் தன்னார்வலர்கள் பதிவு செய்துகொள்ளவும், பயிற்சி பெறவும், எதிர்கால உள்ளூர் தலைவர்களாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது. வேட்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தயார்படுத்தி, இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்களில் களமிறக்க இந்த இயக்கம் திட்டமிட்டுள்ளது. இது வெற்றியடைந்தால்…ஒரு தனிநபரை மையமாகக் கொண்ட அமைப்பாக இல்லாமல், தொண்டர் அடிப்படையிலான ஒரு அமைப்பை உருவாக்க இது அவருக்கு உதவக்கூடும்.
தேர்தல் வெற்றிகள் இல்லாமை
அண்ணாமலைக்கு நல்ல செல்வாக்கு இருந்தபோதிலும், அவரது தேர்தல் செயல்பாட்டுப் பதிவுதான் அவரது மிகப்பெரிய பலவீனமாகத் தொடர்கிறது. அவரது தலைமையின் கீழ், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறத் தவறியது. கட்சியின் வாக்கு சதவீதத்தையும் மக்கள் மத்தியில் அவர் அதிகரித்ததாக ஆதரவாளர்கள் வாதிட்டாலும், அரசியல் வெற்றியின் இறுதி அளவுகோல் தேர்தல் வெற்றிகளே என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாஜகவிலிருந்து சுமூகமாக வெளியேறியிருந்தாலும், அந்தக்கட்சியுடனான தனது தொடர்பை முழுமையாகக் கழற்றிவிடுவது அண்ணாமலைக்குச் சவாலாக அமையலாம். பாஜகவின் பெயர் இல்லாவிட்டாலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஆசியுடன் இது தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்த முயற்சியை “பாஜக-ஆர்எஸ்எஸ்-இன் ‘பிளான் பி’ என்று ஏற்கனவே வர்ணித்துள்ளார். எதிர்ப்பாளர்கள் அவரை பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டாளியாகச் சித்தரிக்கக்கூடும். இது பாஜகவை எதிர்க்கும் வாக்காளர்களை ஈர்க்கும் அவரது திறனைக் குறைக்கலாம்.
தெளிவான கொள்கை நிலைப்பாடு இல்லாமை
அண்ணாமலையின் இந்தத் தொடக்க நிகழ்வில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், அவர் எதை அறிவிக்கவில்லை என்பதுதான்.
அறம், தலைமைத்துவம், அரசியல் மறுமலர்ச்சி குறித்து அவர் விரிவாகப் பேசினாலும், தெளிவான வரையறுக்கப்பட்ட கொள்கை அடிப்படையை அவர் முன்வைக்கவில்லை. “எந்தவொரு கொள்கையும் நிரந்தரமானது அல்ல” என்ற அவரது கருத்து சில வாக்காளர்களை ஈர்க்கக்கூடும். ஆனால், ஒரு நிலையான அரசியல் இயக்கத்திற்குத் தெளிவான அடையாளமும் கொள்கை சார்ந்த செயல்திட்டமும் அவசியம்.
தமிழ்நாட்டில் ஒரு வெற்றிகரமான அரசியல் கட்சியைத் தொடங்குவது மிகவும் கடினமான காரியம் என்பதை வரலாறு உணர்த்துகிறது.
மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு மற்றும் அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் கூட, அந்தச் செல்வாக்கை அமைப்பு ரீதியான பலமாக மாற்றுவதில் சிரமப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் அமைப்புகளை உருவாக்குதல், உள்ளூர் தலைவர்களை வளர்த்தெடுத்தல், நிதி திரட்டுதல் மற்றும் பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான உத்வேகத்தைத் தக்கவைத்தல் போன்ற கடினமான பணிகளை அண்ணாமலை இப்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அவர் தமிழ்நாட்டின் அடுத்த முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுப்பாரா அல்லது செல்வாக்கை அதிகாரமாக மாற்ற முடியாமல் திணறிய தலைவர்களின் நீண்ட பட்டியலில் இணைவாரா என்பது ஒரு கேள்வியைச் சார்ந்தே அமையும். தன்னை மையமாகக் கொண்ட ஒரு இயக்கத்தை, தனக்குப் பிறகும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு இயக்கமாக அண்ணாமலையால் மாற்ற முடியுமா?
