தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் மஹத் ராகவேந்திரா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய்யுடன் ‘ஜில்லா’ திரைப்படத்தில் அவரது தம்பியாக நடித்த மஹத், அந்த அனுபவம் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமைகளில் ஒன்றாக இருந்ததாகக் குறிப்பிட்டு, தனது அதிகாரப்பூர்வ X மற்றும் Instagram பக்கங்களில் “One Last Letter. One Lifetime of Memories.” என்ற தலைப்பில் இந்த உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், “விஜய் அண்ணா, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் இந்த தருணத்தில் என் இதயம் கனக்கிறது. நான் உங்களைப் பார்த்து வளர்ந்தவன். உங்களுடைய சிரிப்பு, நகைச்சுவை உணர்வு மற்றும் திரைப்படங்கள் என் சிறுவயதை மகிழ்ச்சியால் நிரப்பின. நீங்கள் திரையில் தோன்றிய ஒவ்வொரு முறையும், திரையரங்கிற்குச் செல்வது எங்களுக்கு ஒரு திருவிழாவாகவே இருந்தது” என்று மஹத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. ‘ஜில்லா’ திரைப்படத்தில் உங்களுக்குத் தம்பியாக நடித்து, உங்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்ட பாக்கியம் பெற்ற ஒருவனாகவும் இதை எழுதுகிறேன். அந்த நினைவுகள் என் வாழ்நாளின் மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
திரையுலகில் விஜய்யின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் மஹத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“திரையரங்குகள் எப்போதும் ரசிகர்களால் நிரம்பியிருக்கலாம். பல புதிய நட்சத்திரங்களும் திரைப்படங்களும் வரலாம். ஆனால் சினிமாவிலும், மக்கள் மனதிலும் நீங்கள் உருவாக்கிய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பெரிய திரையில் உங்கள் பெயர் தோன்றும் போதும், ஒட்டுமொத்த தியேட்டரும் அதிரும் போதும் ஏற்படும் அந்த மாயாஜாலத்தை நான் வாழ்நாள் முழுவதும் மிஸ் செய்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த எண்ணற்ற நினைவுகள், புன்னகைகள் மற்றும் மகிழ்ச்சிக்கு மனமார்ந்த நன்றி. உங்களுடைய சினிமா பயணம் வெள்ளித்திரையை விட்டு விலகலாம்; ஆனால் நீங்கள் உருவாக்கிய நினைவுகள் எங்கள் இதயங்களை விட்டு ஒருபோதும் விலகாது. எங்களுக்கு நீங்கள் எப்போதுமே ஒரே இளைய தளபதி… என்றென்றும் எங்களின் தளபதி” என்று தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

முழுநேர அரசியலில் கவனம் செலுத்துவதற்காக நடிகர் விஜய் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், ‘ஜனநாயகன்’ அவரது கடைசித் திரைப்படமாக வெளியாகியுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தணிக்கைக் குழுவின் மறுஆய்வு நடைமுறைகள் காரணமாக தாமதமான நிலையில், தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மஹத் ராகவேந்திரா மட்டுமின்றி, நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும், விஜய்யின் சினிமா பயணத்திற்கும் அவரது அரசியல் வாழ்க்கைக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளையும் நெகிழ்ச்சியான பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய்யின் நீண்டகால திரைப் பயணத்தையும், அவருடன் பகிர்ந்து கொண்ட மறக்க முடியாத நினைவுகளையும் நினைவுகூரும் வகையில் மஹத் ராகவேந்திரா எழுதியுள்ள இந்த ‘இறுதி கடிதம்’, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
