நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக மலையாளத் திரைப்பட நடிகை மஞ்சு வாரியர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்வு முறைகேடு மற்றும் தேர்வு நடத்தும் முகமையின் மீதான நம்பகத்தன்மை நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியலை விட மனிதநேயமே எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும்; அதுவே இறுதியில் வெல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “தங்களின் கவலைகளை வெளிப்படுத்தவும், கேள்விகள் எழுப்பவும், கல்வித்துறை அதிகாரிகளுடன் முறையான உரையாடலை எதிர்பார்க்கவும் நாட்டின் இளைஞர்களுக்கு முழு உரிமை உண்டு. கல்வி அமைப்பின் மீதான மக்கள் நம்பிக்கை என்பது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயம் ஆகியவற்றின் மூலமே வலுப்பெறும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் தேர்வு முறையின் மீது மக்கள் வைத்துள்ள ஒட்டுமொத்த நம்பிக்கை சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், “மாணவர்களின் திறமை மட்டுமே வெல்ல வேண்டும். நமது மாணவர்களுக்கு தேவையானது பயம் நிறைந்த சூழல் அல்ல; நம்பிக்கையும், நியாயமான முறையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலமும்தான்” என்றும் மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒவ்வொரு வினாத்தாள் கசிவும் ஒரு தகுதியான மாணவரின் இருக்கையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் திருடுவதற்குச் சமம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் போராடும் மாணவர்களின் குரலுக்கு பதிலளிக்காமல் கல்வித்துறை அதிகாரிகள் மௌனம் காப்பது ஜனநாயகத்தை மெல்லக் கொல்லும் செயலாகும் என்றும், தேர்வு எழுதும் முன்பே யார் தேர்ச்சி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு அமைப்பில் ‘திறமை’ என்பது கட்டுக்கதையாக மாறிவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு மஞ்சு வாரியருடன் இணைந்து மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், பார்வதி திருவோடு உள்ளிட்ட பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த நியாயமான போராட்டத்தில் ஜனநாயகத்தின் குரல் ஒடுக்கப்படக் கூடாது என்றும், வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர்கள் தொடர்ந்து 32-வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நையாண்டி நிகழ்வுகள் மூலம் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் போராட்டக்காரர்களுக்கும் நிஹாங் சீக்கியர்களுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், டெல்லி போலீசார் தலையிட்டு சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்லத் திட்டமிட்டதைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டதுடன், தண்ணீர் பீரங்கிகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு, தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
