Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay EPS

அக்டோபர் 6ஆம் தேதி நடந்து முடிந்த தாராபுரம் – மதுராந்தகம் இடைத்தேர்தலில், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலைவிட வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் அக்டோபர் 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ள நிலையில், தற்போது களத்தில் யாருக்கு காற்று பலமாக வீசுகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், களத்தில் விசாரித்தபோது பல்வேறு முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்று தலைவர்களின் தொடர் விசாரணை
முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என மூன்று முக்கிய தலைவர்களுமே வாக்குப்பதிவு முடிந்ததிலிருந்து தொகுதிகளின் களநிலவரம் குறித்து தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தாராபுரம் தொகுதி நிலவரத்தை கேட்டறிந்ததில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிக உற்சாகத்தில் இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அதிமுக தரப்பில் விசாரித்தபோதுதான் ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

EPS Stalin

திமுக-அதிமுக ரகசிய ஆலோசனை?
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான புதிதில், திமுக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக தொடர்பு கொண்டு ஒரு யோசனை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, திமுகவும் அதிமுகவும் இணைந்து இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என்றும், இந்த இடைத்தேர்தலே செல்லாது என நீதிமன்றத்தில் இரு கட்சிகளும் தனித்தனியாக வழக்கு தொடரலாம் என்றும், அதன் மூலம் தவெகவுக்கு ஒரு செக் வைக்கலாம் என்றும் திமுக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த யோசனையை எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்திலேயே நிராகரித்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  "TET விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மௌனம் ஏன்?" – 3 லட்சம் ஆசிரியர்களுக்காக அன்பில் மகேஷ் எழுப்பிய சரமாரி கேள்வி!

ஏற்கனவே திமுகவும் அதிமுகவும் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக விஜய் மேடைக்கு மேடை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்தால், விஜய் கூறி வரும் குற்றச்சாட்டை நாமே உறுதி செய்தது போல் ஆகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கருதியதாக கூறப்படுகிறது.

மேலும், தாராபுரம் -மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே ஏற்கனவே அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளாக இருப்பதாகவும், இரு தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிட்டு வெற்றியைப் பார்க்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதாக தகவல்.

எடப்பாடிக்கு வந்த நம்பிக்கை ரிப்போர்ட்
எடப்பாடி பழனிசாமி கணக்குப் போட்டு நம்பியதைப் போலவே, தற்போது தாராபுரம் தொகுதியில் இருந்து அவருக்கு மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாகவே வாக்குப்பதிவு நடைபெற்ற நாளிலிருந்து தற்போது வரை எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தாராபுரம் கிராமப்புறங்களில் கவுண்டர் சமூக வாக்குகள் மட்டுமல்லாமல், தலித் வாக்குகளும் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அதிக அளவில் கிடைத்திருப்பதாக அவருக்கு தகவல் சென்றுள்ளது.

dharapuram

தவெகவின் யூத் வாக்குகள் குறைந்ததா?
அதே நேரத்தில், தவெகவின் முக்கிய பலமாக கருதப்படும் இளைஞர் வாக்குகள் இந்த முறை கணிசமாக குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த இளைஞர் வாக்குகள் எங்கு செல்லும் என்பது குறித்து அதிமுக தலைமைக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும், தவெகவின் முக்கியமான யூத் வாக்குகள் எதிர்பார்த்த அளவுக்கு பதிவாகாதது தங்களுக்கு சாதகமாக மாறியிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல்கள் சென்றுள்ளது. இதனால் தாராபுரம் தொகுதியில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அக்கட்சி தலைமை நம்பிக்கையுடன் இருக்கிறது.

இதையும் படியுங்க  ₹347 கோடி ஊழல் ஃபைல்கள்..' திமுக EX அமைச்சர்களை காப்பாற்றும் தவெக..! வெள்ளை அறிக்கை' வெற்று அறிக்கையா?

இதற்கிடையே, தாராபுரம் தொகுதியில் மறைமுகமாக ஒரு முக்கியமான அரசியல் கணக்கும் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 29-வது பூத்தில் தவெகவில் இருந்த சொந்த நிர்வாகிகளே அதிமுகவுக்கு வேலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், கணிசமான எண்ணிக்கையிலான பூத்துகளில் இருந்த தவெக நிர்வாகிகளை அதிமுக தரப்பு பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உண்மையா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது இதன் தாக்கம் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுராந்தகத்திலும் அதிமுகவுக்கே சாதகமா?
மறுபுறம், மதுராந்தகம் தொகுதியிலும் அதிமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் பிரதான போட்டி நிலவுவதாக தகவல்கள். மதுராந்தகத்தில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிக்க வந்ததாகவும், இந்த நிலை தவெகவுக்கு எதிராக மாறக்கூடும் என்றும் பனையூர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது.

மேலும், மதுராந்தகத்தில் பாமகவின் வாக்குகள் திமுக, அதிமுக, தவெக என மூன்று தரப்புக்கும் பிரிந்திருந்தாலும், வன்னியர் சமூகத்தின் பெரும்பாலான வாக்குகள் அதிமுகவுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

Republic Tamil

தலித் வாக்குகளில் மும்முனைப் போட்டி?
இதனிடையே, தலித் வாக்குகளை தவெகவிடம் இருந்து திமுகவும் அதிமுகவும் கணிசமாகப் பிரித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மதுராந்தகத்தில் தவெகவின் வாக்கு வங்கி எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக அமையவில்லை என்ற தகவலும் பனையூர் அலுவலகத்துக்கு சென்றுள்ளது.

இதையும் படியுங்க  "தமிழ் படிச்சவங்களுக்கு இனி 'ஜாக்பாட்' தான்! போலி சான்றிதழ்களுக்கு செக் வைத்த தமிழக அரசின் புதிய சட்டம்!

தவெகவில் களப்பணி குறைந்ததா?
தவெக தரப்பை பொறுத்தவரை, தேர்தல் களத்தில் உண்மையாக நின்று பணியாற்றிய நிர்வாகிகள் பெரிய அளவில் இல்லை. அதுமட்டுமல்லாமல், தவெகவில் இருக்கும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், மாற்றுக் கட்சிகளில் இருந்து புதிதாக கட்சிக்கு வந்தவர்களை உரிய முறையில் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கட்சிக்குள் எழுந்துள்ளது.

இதன் காரணமாகவே தேர்தல் களத்தில் தவெகவின் களப்பணி எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லை என்ற தகவல் முதலமைச்சர் விஜய்க்கு சென்றுள்ளது.

அப்செட்டில் விஜய்?
தாராபுரம் -மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு கிடைத்த களநிலவர அறிக்கைகள் தவெக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர் வாக்குகள் குறைந்திருப்பது, கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு ஆதரவு இருப்பதாக கூறப்படும் தகவல்கள், தலித் மற்றும் வன்னியர் வாக்குகளின் நகர்வு, தவெகவின் களப்பணி குறைவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் முதலமைச்சர் விஜய்க்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் சற்று அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இவை அனைத்தும் தற்போது வெளியாகியுள்ள களத்தகவல்கள் மட்டுமே. உண்மையான நிலவரம் என்ன என்பதும், தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் யாருக்கு வாக்காளர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்பதும் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவில்தான் உறுதியாகத் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago