https://republictn.com/

சமீபத்தில் நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 வாக்குகளுடன் பாஸ் செய்தது. இந்த வெற்றியில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 22 அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பங்கு மிக முக்கியமாகப் பார்க்கப்பட்டது.

“ஆதரவு கொடுத்த கையோடு தவெக அமைச்சரவையில் 5 முதல் 6 அமைச்சர் பதவிகளைப் பிடித்துவிடலாம்” என வேலுமணி தரப்பு போட்ட கணக்கிற்கு, தற்போது முதல்வர் அலுவலகம் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவளித்த உடனேயே, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பில் அமைச்சர் பதவிகளுக்கான பட்டியல் தயாரானதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெக தரப்பிலிருந்து வந்துள்ள தற்போதைய தகவல் அந்த தரப்பினரை அதிர வைத்துள்ளது.

“அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு தவெக அமைச்சரவையில் இடமில்லை” என்பதை முதல்வர் அலுவலகம் மிகத் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிகிறது. தவெக-வின் இந்த அதிரடி முடிவின் பின்னணியில் வலுவான அரசியல் காரணங்கள் அலசப்படுகின்றன.

இமேஜை உடைக்க விரும்பாத விஜய்
தேர்தல் பிரச்சார மேடைகளில் “ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்” என்ற முழக்கத்தோடுதான் விஜய் களம் கண்டார். இப்போது ஆட்சிக்கு வந்த உடனேயே, பதவிகளுக்காகத் தாய் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு வந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுத்தால், அது தவெக-வின் கொள்கைக்கே களங்கத்தை ஏற்படுத்தும் என விஜய் கருதுகிறார் என்கின்றனர்.

ஏற்கனவே சட்டமன்றத்தில், “இது மாற்றமா? அல்லது பதவிகளுக்கான பரிமாற்றமா?” என திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தவெக-வை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு மேலும் இடம் கொடுத்தால் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், விஜய் இந்த ‘நோ-அமைச்சர்’ முடிவில் பிடிவாதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகளின் முணுமுணுப்பு
தவெக ஆட்சி அமைக்க ஆரம்பம் முதலே நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கே இன்னும் அமைச்சரவையில் பங்கு கொடுக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், நேற்று வந்து ஆதரவு கொடுத்த அதிமுக அதிருப்தியாளர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து அமைச்சர் பதவி கொடுத்தால், அது தார்மீக ரீதியாகத் தங்களோடு இருக்கும் கூட்டணிக் கட்சிகளைப் பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கும் என்பதையும் தவெக மேலிடம் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்தரத்தில் வேலுமணி டீம்..!
தவெக-வுக்கு ஆதரவு கொடுத்ததால், எடப்பாடி பழனிசாமி கோபமடைந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 29 முக்கிய நிர்வாகிகளை கட்சியின் அடிப்படைப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டார். இப்பொது தாய் கட்சியிலும் பதவிகள் பறிபோய், ஆதரித்த தவெக அரசிலும் அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதால் வேலுமணி தரப்பு “இப்படியும் போக முடியாமல், அப்படியும் போக முடியாமல்” அந்தரத்தில் தொங்குவது போல நிலைகுலைந்து போயுள்ளது தற்போதைய ஹாட் டாபிக்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago