Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Sathyabama

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனைவரது பார்வையும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் மீதுதான் உள்ளது. நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு, இரு தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால், இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த வாக்காளர்களின் மனநிலை ஒருபுறம் இருக்க, நேற்று இரவு சமூக வலைதளங்களில் வெளியான ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவும் தற்போது மிகப்பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

வைரலான சத்தியபாமா வீடியோ
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசுவது போன்ற ஒரு வீடியோ, நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், எடப்பாடி பழனிசாமி குறித்து சத்தியபாமா சில கருத்துகளை தெரிவித்ததாகவும், கடந்த முறை ரூ.31 கோடி வரை செலவு செய்ததாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்றும் அவர் பேசியதாகவும் கூறப்பட்டது.

மேலும், அமைச்சர்கள் தங்குவதற்காக ரிசார்ட் முன்பதிவு செய்ததற்கே ரூ.14 லட்சம் செலவு செய்ததாகவும், கூட்டணி கட்சியினர் விமானத்தில் வருவதற்கான டிக்கெட் செலவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் பேசியதாக அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. வீடியோ வெளியானதும் எதிர்க்கட்சியினரும், சமூக வலைதள பயனர்களும் சத்தியபாமாவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

Sathyabama

“அது நான் பேசியதல்ல” – சத்தியபாமா
இந்நிலையில், வாக்களிக்க வந்த சத்தியபாமாவிடம் செய்தியாளர்கள் இந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், தான் அவ்வாறு பேசவே இல்லை என்றும், அந்த வீடியோ முழுக்க முழுக்க எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோ என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த வீடியோ தேர்தலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், வீடியோவை வெளியிட்ட நபர் யார் என்பது தொடர்பாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இதையும் படியுங்க  எதற்கும் இலாயக்கற்ற தவெக அரசு.. விஜயின் ரெய்டு அஸ்திரமும்.. ஸ்டாலினின் காட்டமான பதிலடியும்!

வீடியோ வெளியிட்டது யார்?
ஆரம்பத்தில் இந்த வீடியோவை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ரகசியமாக வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. சத்தியபாமா அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் சிலர் அதிமுகவினரை நேரில் சந்தித்து விசாரித்ததாகவும், அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோதான் இது என்றும் ஒரு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வேறு ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. சத்தியபாமாவை தாராபுரம் தொகுதி வேட்பாளராக அறிவித்ததில் அதிருப்தியடைந்த தவெக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரே இந்த வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.

வேட்பாளரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சிக்குள் இருக்கும் சில நிர்வாகிகள் இந்த வேலையை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தவெக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாராபுரத்தில் வீடியோ தாக்கம் ஏற்பட்டதா?
இந்த வீடியோவால் தாராபுரம் தொகுதியில் தவெகவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், நிலவரத்தைப் பொறுத்தவரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக கூற முடியாது. தாராபுரம் நகரப் பகுதியைத் தவிர, சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் வீடுகள் பரவலாக அமைந்துள்ளன. மேலும், அப்பகுதிகளில் அனைவரும் அதிக அளவில் ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தும் நிலை இல்லை என்றும் கூறப்படுகிறது.

நேற்று மாலைதான் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பெருநகரங்களில் வைரலான அளவுக்கு தாராபுரம் சுற்றுவட்டார கிராமங்களிலும், குறிப்பாக வயதான வாக்காளர்கள் மத்தியிலும் இந்த வீடியோ சென்றடையவில்லை என்ற நிலவரமும் கூறப்படுகிறது.

dharapuram

இளைஞர்கள் எங்கே போனார்கள்?
இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான மாற்றம், இளைஞர்களின் வாக்குப்பதிவு ஆர்வம் குறைந்திருப்பதாகும். கடந்த தேர்தலில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் என பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாக்களிக்க வந்தனர். வாக்களிக்கும் வயது கூட இல்லாத சிறு குழந்தைகள் கூட, “அப்பா, அம்மா எனக்காக விஜய்க்கு இந்த ஒரு முறை ஓட்டு போடுங்கள்” என்று கேட்டு பிரசாரம் செய்த அளவுக்கு இளைஞர்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்களிடம் ஒரு பெரிய உற்சாகம் காணப்பட்டது.

இதையும் படியுங்க  "என்னது.. தக்காளி வெற்றிக் கழகமா?! சென்னை பஸ் போர்டை பார்த்து ஷாக்கான மக்கள்!"

இதன் காரணமாக கடந்த முறை வாக்குப்பதிவு சதவீதமும் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த முறை காலை முதலே வாக்குச்சாவடிகளில் காணப்பட்ட காட்சியில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. 35 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக அளவில் வரிசையில் நின்று வாக்களித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை இருந்த அந்த தேர்தல் உற்சாகம் இந்த முறை இளைஞர்களிடம் குறைந்திருப்பதாகவே களநிலவரம் காட்டுகிறது.

குறைந்த வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்?
கடந்த முறையை ஒப்பிடும்போது இந்த முறை வாக்குப்பதிவு சதவீதமும் குறைந்துள்ளது. பொதுவாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் என்றும், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தால் அது எதிர்க்கட்சிக்கு பிளஸ்ஸாக மாறும் என்றும் அரசியல் கணக்குகள் கூறுகின்றன.

உதாரணமாக, மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை சுமார் 93 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் இந்த முறை அந்த அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனால் தற்போது இரு தொகுதிகளிலும் தவெக சற்று பின்னுக்கு தள்ளப்பட்டு, அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசுவதாக களநிலவரம் கூறுவதாக தெரிகிறது.

Vijay’

எடப்பாடி முதல் விஜய் வரை
இந்த நிலவரத்தை அதிமுக, திமுக, தவெக ஆகிய மூன்று முக்கிய கட்சிகளின் தலைமைகளும் காலை முதலே உன்னிப்பாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேரம் செல்ல செல்ல தொகுதி பொறுப்பாளர்களிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசி, வாக்குப்பதிவு நிலவரம் எப்படி இருக்கிறது, தங்களுக்கு சாதகமாக நிலைமை உள்ளதா, தவெகவுக்கு எவ்வளவு வாக்குகள் செல்கின்றன என்பது குறித்து தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "ஆடம்பரம் வேண்டாம், மக்களுக்கு 10 நாளில் தீர்வு! பெரம்பூரில் மிரட்டும் முதல்வர் விஜய்யின் மாடல் அலுவலகம்!"

தங்களுக்கு சாதகமாக நிலைமை செல்வதை உணர்ந்த அதிமுக தலைமை உற்சாகத்தில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுக தலைமையும் தேர்தல் நிலவரம் குறித்து தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அக்கட்சியிடம் பெரிய அளவிலான உற்சாகம் காணப்படவில்லை என்றும், பொறுப்பாளர்களிடம் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், வைரல் வீடியோ சர்ச்சை, உட்கட்சி பிரச்சனை மற்றும் இளைஞர்கள் வாக்குப்பதிவுக்கு அதிக அளவில் வராதது போன்ற அடுத்தடுத்த தகவல்களால் தவெக தலைமையும் கவலை மற்றும் ஆலோசனையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில், தவெக பொறுப்பாளர்களிடமிருந்தும் திமுகவுக்கு கிடைத்ததைப் போன்றே களநிலவரத் தகவல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

தாராபுரத்தின் வாக்காளர் கணக்கு
தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2,22,306 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,10,728 ஆண் வாக்காளர்களும், 1,11,613 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி மாறிய வேட்பாளரின் தாக்கம், இளைஞர்களின் தேர்தல் ஆர்வம் குறைந்திருப்பது, கிராமப்புற வாக்காளர்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பது என பல்வேறு காரணிகள் இந்த தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இப்போது அனைவரது கவனமும் ஒரே கேள்வியை நோக்கியே திரும்பியுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் பதிவான வாக்குகள் யாருக்கு சாதகமாக மாறும்? கிராமப்புற வாக்காளர்களும், முதியவர்களும் எந்த கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்பதுதான் இறுதியில் இந்த இடைத்தேர்தலின் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணியாக அமையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago