Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஆந்திரப் பிரதேசத்தில் நடிகரும் துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் தீவிர ரசிகையான பெண் ஒருவருக்கு, அவர் விழித்திருக்கும் நிலையிலேயே மருத்துவர்கள் வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம், தர்சி பகுதியைச் சேர்ந்த கோடேஸ்வரம்மா (45) என்ற பெண்மணி, வலிப்பு மற்றும் திடீர் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ. பரிசோதனையில், மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பாக, அந்தக் கட்டி பேச்சுத் திறன் மற்றும் உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய நரம்புகளுக்கு அருகில் இருந்ததால், முழுமையான மயக்க மருந்து வழங்காமல், நோயாளியை விழிப்புடன் வைத்தபடியே அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

குண்டூர் மாவட்டம் வட்லமுடியில் உள்ள டி.வி.சி. மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பத்மநாபுனி அருண் குமார் தலைமையிலான மருத்துவக் குழு, அரிய வகை ‘அவேக் கிரானியோட்டமி’ என்ற மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.

இதையும் படியுங்க  ஜூன் 28 மறக்கக்கூடாத கடமை: குழந்தைகளின் சிரிப்பு என்றும் நிலைக்க 2 சொட்டு போலியோ மருந்து!

அறுவை சிகிச்சைக்கு முன்பு, கோடேஸ்வரம்மா நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என்பது மருத்துவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சையின் போது அவருக்கு ஏற்படக்கூடிய பயம் மற்றும் பதற்றத்தை குறைக்கும் வகையில் மருத்துவர்கள் புதுமையான முறையை கையாண்டனர்.

ஆபரேஷன் அறையில் நோயாளியின் படுக்கைக்கு அருகில் மடிக்கணினி ஒன்று வைக்கப்பட்டு, பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டன.

திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, மருத்துவர்கள் அவரிடம் தொடர்ந்து உரையாடியதுடன், கைகள் மற்றும் கால்களை அசைக்கச் சொல்லி மூளையின் செயல்பாடுகளையும் கண்காணித்தனர்.

தனக்குப் பிடித்த நடிகரின் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததால், கோடேஸ்வரம்மா வலி மற்றும் பயத்தை மறந்து அமைதியாக இருந்ததுடன், மருத்துவர்களின் கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்தார்.

மருத்துவக் குழுவின் இந்த சமயோசிதமான முயற்சியால், மூளையின் முக்கிய செயல்பாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது கோடேஸ்வரம்மா உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க  குழந்தைகளின் அழுகையை நிறுத்த மது கொடுக்கும் தாய்மார்கள்..? குடிகாரிகளால் வெடித்த சர்ச்சை..!

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடிகர் பவன் கல்யாண் நேரில் ஆபரேஷன் அறைக்குச் சென்று தனது ரசிகையை சந்தித்து நலம் விசாரித்தார்.

சினிமா மீதான ரசிகையின் தீவிர பற்றும், மருத்துவர்களின் நவீன மருத்துவ அணுகுமுறையும் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் பெரும் பேசுபொருளாக மாற்றியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago