நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுயிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி பேடுகளை மீண்டும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில், அதாவது மே 7-ம் தேதியே விண்ணப்பித்துள்ளோம். ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டது. எனவே, காலதாமதமாக தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தல் வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேஷாத்திரி நாயுடு தேர்தல் நடைமுறைகள், சில குறைபாடு, வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வழக்கு தொடர முடியாது என சட்டத்தில் தெளிவாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 329(b)-ன் படி முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர முடியாது. தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். முறைகேடு நடந்ததாகக் கூறி சட்ட விதிகளுக்கு எதிராக, மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார் என வாதிட்டார்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் பிரிவு 329(b)-ன் படி ஸ்டாலினின் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
