கடந்த 2017-ஆம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீஸ் காவலில் இருந்தார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவரின் செல்போனைப் பயன்படுத்தி, தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியை அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த அழைப்பின்போது, சுகேஷ் சந்திரசேகர் தன்னை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், தனக்கு உடனடியாக ஜாமீன் அல்லது இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதியை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும், நீதிபதிக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், தென்னிந்தியாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதியின் பெயரைப் பயன்படுத்தி, பிராந்திய உச்சரிப்புடன் பேசியதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஒரே தொலைபேசி அழைப்பில் சுகேஷ் இரண்டு வேடங்களில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
முதலில் தன்னை உச்ச நீதிமன்ற நீதிபதியின் தனிச் செயலாளர் என அறிமுகப்படுத்திய அவர், பின்னர் குரலை மாற்றி தானே உச்ச நீதிமன்ற நீதிபதி பேசுவதாகக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தான் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் சார்பில் பேசுவதாகக் கூறிய சுகேஷ், உடனடியாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதியை வலியுறுத்தியதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் பதவி ரீதியாக கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்ததாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி சுகேஷ் சந்திரசேகர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் 29-ஆம் தேதி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற தலைமை நீதிபதி ஹர்ஷிதா மிஸ்ரா தண்டனை விவரங்களை அறிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 170-வது பிரிவின் கீழ், அரசு அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 189-வது பிரிவின் கீழ், அரசு அதிகாரியை காயப்படுத்தும் வகையில் மிரட்டிய குற்றத்திற்காக மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அதேபோல், 507-வது பிரிவின் கீழ், தொலைபேசி மூலம் அநாமதேயமாகக் குற்றவியல் மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மூன்று தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், சுகேஷ் சந்திரசேகருக்கு மொத்தம் 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்தையும் அதன் நிர்வாக அமைப்பையும் சீர்குலைக்க முயன்ற இத்தகைய செயல்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுகேஷின் நடவடிக்கையை “அபத்தமான நாடகம்” எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதி போல நடித்து நீதித்துறையின் எல்லைகளைத் தாண்டி மிரட்டல் விடுத்த செயல் சகித்துக்கொள்ள முடியாதது என்றும், இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக, டெல்லி போலீஸ் காவலில் இருந்தபோது சுகேஷுக்கு செல்போனை வழங்கியதாகக் கூறப்படும் காவலர் மன்ஜீத்தின் பங்கு குறித்தும் நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது. சுகேஷுக்கு அவர் எவ்வாறு செல்போனை வழங்கினார் என்பது குறித்து மீண்டும் விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டும் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலிக் குரல்கள் மற்றும் ‘டீப்ஃபேக்’ வீடியோக்கள் மூலம் இதுபோன்ற மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதால், அவற்றை எதிர்கொள்ள நீதித்துறை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி ஹர்ஷிதா மிஸ்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்கின் இறுதிக்கட்டத்திலும் சுகேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, தன்னை மிரட்டியதாகக் கூறப்படும் சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி, டெல்லி போலீசாருடன் இணைந்து தனக்கு எதிராகச் செயல்படுவதாக குற்றம்சாட்டியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கைத் தாமதப்படுத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எந்தவித சலுகையும் வழங்காமல், விதிக்கப்பட்ட அனைத்து தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையிலான செயல்களுக்கு இந்தத் தீர்ப்பு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
