https://republictn.com/

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமணமான மூன்று மாதங்களிலேயே, மனைவியின் முன்னாள் காதலனை கணவன் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஜூன் 2026-இல் நிகழ்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா சிறுமலை தாளக்கடை பகுதியைச் சேர்ந்த வீரமணி (24) என்பவருக்கும், நாகலட்சுமி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு நாகலட்சுமி, அரவிந்த் (25) என்ற இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகும் நாகலட்சுமி மற்றும் அரவிந்த் இடையேயான தொடர்பு தொடர்ந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, தனது மனைவியின் முன்னாள் காதலனை கொலை செய்யத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு, வீரமணி தனது மனைவியின் கைப்பேசியைப் பயன்படுத்தி அரவிந்திற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் நாகலட்சுமிதான் அழைக்கிறார் என நம்பிய அரவிந்த், சிறுமலை வனப்பகுதிக்கு அருகிலுள்ள தனிமையான இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மறைந்திருந்த வீரமணி, அரவிந்துடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் அவரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, அரவிந்தின் சடலத்தை தாளக்கடை பிரிவு அருகே இருந்த குப்பைக் கிடங்கில் வீசிவிட்டு வீரமணி தலைமறைவானதாக கூறப்படுகிறது.

மகன் காணாமல் போனதாகக் கூறி அரவிந்தின் குடும்பத்தினர் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் நாகலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டதில், வீரமணி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், திங்கட்கிழமை மலைப்பகுதியில் சுற்றித் திரிந்த வீரமணியை கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை குப்பைக் கிடங்கிலிருந்து அரவிந்தின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

தற்போது கைது செய்யப்பட்ட வீரமணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago