சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரை மிக விரைவில் சர்வதேச தரத்திலான சுற்றுலா தளமாக மாறும் வகையில் புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தனது 2026–27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்திருந்த மெரினா ரோப் கார் திட்டம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரையின் அழகை வான்வழியாக ரசிக்க காத்திருக்கும் சென்னை மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த திட்டம் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் படி, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் அல்லது ரோப்வே அமைக்கப்பட உள்ளது. வங்காள விரிகுடா கடலின் அலைகளையும் விரிந்து பரந்த கடற்கரையையும் உயரத்தில் இருந்து ரசிக்கும் வகையில் பயணம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, தற்போது அதன் தொழில்நுட்ப மற்றும் நிதி சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம், பொதுத்-தனியார் பங்களிப்பு (PPP) மாடலில் உருவாக்கப்பட உள்ளது. திட்டத்தின் வழித்தடங்கள் மற்றும் தூண்கள் அமைப்பதில் உள்ள சவால்களை குறைக்கும் வகையில் மாற்று பாதைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அனுமதிகளையும் பெற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மெரினாவின் இயற்கை அழகிற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு உறுதி செய்துள்ளது.
இந்த ரோப் கார் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், மெரினா கடற்கரையின் சுற்றுலா வருவாய் அதிகரிப்பதோடு கூடுதல் பொழுதுபோக்கு அம்சமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் கடற்கரைக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது ஒரு புதிய கவர்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்.
அண்ணா சதுக்கம், கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் மற்றும் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் நிலையங்கள் அமைக்கப்படலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த ரோப் கார் சேவை முழுமையாக சூரிய ஒளி ஆற்றல் (Solar Powered) மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ரூ.73 கோடியாக மதிப்பிடப்பட்ட இந்த திட்டம் தற்போது சுமார் ரூ.125 கோடி மதிப்பீட்டில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்ப கட்டப் பணிகளின் போது, உள்ளூர் மீனவ சமூகத்தினர் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, பொதுமக்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்ட பிறகே அடுத்த கட்டப் பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
