Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, ஐபோன் மற்றும் ஆடம்பர பைக் வாங்க வேண்டும் என்ற ஆசையில் 67 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 13 வயது பள்ளி மாணவி உட்பட நான்கு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரிப்பாடு அருகே உள்ள கருவாற்று பகுதியில் சிவன்குட்டி என்ற 67 வயது முதியவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மகளின் பிரசவத்திற்காக அவரது மனைவி மருத்துவமனைக்கு சென்றிருந்ததால், சம்பவத்தன்று சிவன்குட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை காலை சிவன்குட்டி வீட்டிற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஹரிப்பாடு போலீசார் விசாரணையை தொடங்கினர். சடலத்தின் அருகிலும் வீட்டின் அறைகளிலும் மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த சுமார் 9 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன.

இதனால், நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதே நேரத்தில், சம்பவ நேரத்தில் அந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதையும் படியுங்க  “இந்தியாவின் அடுத்த பாதுகாப்பு மூவ்.. ரஷ்யாவுடன் நடந்த ரகசிய ஆலோசனை!”

அப்போது, கொலை நடைபெற்ற நேரத்தில் ஒரு பள்ளிச் சிறுவனின் செல்போன் எண், சிவன்குட்டியின் உறவுக்காரரான 13 வயது பள்ளி மாணவியின் செல்போன் எண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதலில், சிவன்குட்டி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால், தனது நண்பர்களை வைத்து அவரை கொலை செய்ததாக சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கொலைக்கான உண்மையான காரணம் வேறு என்பது தெரியவந்தது.

சிவன்குட்டியின் வீட்டில் தங்க நகைகள் இருப்பதை அறிந்திருந்த சிறுமி, அந்த நகைகளை கொள்ளையடித்து விற்று ஐபோன் வாங்க திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக தனது பள்ளியில் படிக்கும் மூன்று சீனியர் மாணவர்களை தொடர்புகொண்டு கொலைக்கு திட்டமிட்டுள்ளார்.

நகைகளை கொள்ளையடித்தால் தங்களுக்கு ஆடம்பர பைக் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அந்த சிறுமி மூன்று மாணவர்களிடம் ஆசை வார்த்தை கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு அந்த மூன்று சிறுவர்களும் ரயில் மூலம் ஆலப்புழாவுக்கு வந்துள்ளனர்.

இதையும் படியுங்க  ரெட் அலர்ட் கேரளா! எபோலா வைரஸ் பீதி: திருவனந்தபுரம் ஆய்வகத்திற்கு பறந்த ரத்த மாதிரிகள்!

பின்னர், சிவன்குட்டியின் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த அவர்கள், அவரது முகத்தில் மிளகாய்த்தூளை தூவியதாகவும், அவரை தாக்கி கீழே தள்ளி கை, கால்களை கட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, கழுத்தை நெரித்து சிவன்குட்டியை கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த சுமார் 9 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நடைபெற்றபோது, 13 வயது சிறுமி செல்போன் மூலம் வீடியோ காலில் தொடர்பில் இருந்து, கொலையை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 13 வயது சிறுமி மற்றும் அவருடன் தொடர்புடைய மூன்று பள்ளி மாணவர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், மற்ற மூன்று சிறுவர்களும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேரும் சிறார்கள் என்பதால், அவர்களை குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, சிறார் நீதிமுறை நடைமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்க  மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் தாம்பத்யம் தவறு.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஐபோன் மற்றும் ஆடம்பர பைக் மீதான ஆசை, ஒரு முதியவரின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு சென்றிருப்பது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாசை மற்றும் ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம், சிறார்களை எவ்வளவு மோசமான முடிவுகளுக்கு கொண்டு செல்லக்கூடும் என்பதற்கு இந்த சம்பவம் அதிர்ச்சிகரமான உதாரணமாக அமைந்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago