Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜாராம் உள்ளிட்ட 49 தமிழர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்காததால், உறவினர்கள் கண்ணீருடன் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திபெத்–நேபாள எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் கைலாஷ் யாத்திரை மற்றும் ஆன்மிகச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 பேர் தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஆலமேல் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்ற இளைஞரும் ஒருவர்.

இதையும் படியுங்க  நேபாள பேரழிவு.. பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிப்பு.. நடிகை நளினி கொடுத்த முக்கிய அட்வைஸ்!

தனியார் ஆன்மிகச் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் கடந்த 14ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து நேபாளம் வழியாக கைலாஷ் யாத்திரைக்கு 49 பேர் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. யாத்திரையை நிறைவு செய்த பின்னர், சீனா–நேபாள எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் குடியேற்ற நடைமுறைகளை மேற்கொண்டிருந்தபோது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தின் வேகம் காரணமாக அந்தக் குடியேற்ற அலுவலகக் கட்டிடமும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்த யாத்திரிகர்களின் நிலை குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 26ஆம் தேதி முதல் ராஜாராம் உள்ளிட்ட யாத்திரிகர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவர்களிடம் இருந்து எந்தவித தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் மொபைல் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்தாலும் யாத்திரிகர்களால் தங்களது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "டீசலும் இல்லை… கரண்டும் இல்லை! தண்ணீரில் ஓடும் இந்தியாவின் 'சூப்பர்' ரயில்!"

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரில் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1,300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களில் இந்தியர்களும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்களில் 103 பேர் சிக்கியிருந்ததாக தகவல் வெளியான நிலையில், ராசுவா பகுதியில் சிக்கியிருந்த 21 தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது காத்மாண்டுவிற்கு வடக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மீதமுள்ள தமிழர்களின் இருப்பிடம் மற்றும் தற்போதைய நிலை குறித்து உறுதியான தகவல்களைப் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கைலாஷ் யாத்திரை சென்ற ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 77 பக்தர்களுடனும் தொடர்பு இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நேபாள ராணுவம் பல்வேறு பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க  "உண்ணாவிரதம் தான் முடிவு… ஆனா ஆட்டம் இனிமேதான்! கல்வி அமைச்சகத்தை அதிர வைத்த சோனம் வாங்சுக்கின் வைரல் போஸ்ட்!"

தமிழக அரசு, இந்தியத் தூதரகம் மற்றும் நேபாள அரசு ஆகியவற்றுடன் இணைந்து, தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை அறியவும், அவர்களைப் பாதுகாப்பாக மீட்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

செங்கல்பட்டு இளைஞர் ராஜாராம் உள்ளிட்ட 49 தமிழர்களின் நிலை குறித்து உடனடியாகத் தகவல் பெற்று, அவர்கள் எங்கு உள்ளனர் என்பதை உறுதி செய்து, அனைவரையும் பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago