நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியன், இந்தப் படத்தில் நடித்த அனுபவங்களையும், படத்தின் கதையையும், படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தையும் பற்றி மனம் திறந்து பேசினார்.
அப்போது பேசிய அவர், ஆரம்பத்தில் சில நாட்களுக்கு கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தின் கதையைக் கேட்கச் சென்றதாக தெரிவித்தார்.
“கிராமத்து படம் கொஞ்ச நாள் வேண்டாம்னு நினைச்சுட்டுத்தான் கதை கேட்கப் போனேன். ஆனால் இயக்குநர் கணேஷ் சார் இந்தக் கதையைச் சொன்னதும், இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது,” என்றார்.
மேலும், படத்தின் கரு தான் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், “பள்ளியில் இந்த வசதி இல்லை, அந்த வசதி இல்லை என்று நாம் பேசுகிறோம். ஆனால், படிக்க அடிப்படை வசதியே இல்லாமல் வாழும் மக்களும் நம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள் என்பதை இந்தக் கதை உணர்த்தியது. அந்த மக்களின் வாழ்க்கையைப் பேசும் இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஏற்பட்டது,” என்று கூறினார்.
இந்தப் படத்தை தயாரிக்க நம்பிக்கை வைத்து முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
படப்பிடிப்பு நடைபெற்ற இடம் குறித்து பேசிய ரம்யா பாண்டியன், “நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் கூகுள் மேப்பில்கூட இல்லாத ஒரு கிராமம். அங்கு மொபைல் நெட்வொர்க்கே கிடையாது. தங்குவதற்கும், அடிப்படை வசதிகளுக்கும் சிரமம் இருந்தது.
ஆனால் அங்குதான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. அங்குள்ள மக்கள் இன்னும் இயற்கையோடு ஒன்றிணைந்து அழகாக வாழ்ந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், அவர்களோடு வாழ்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது,” என்றார்.
ஒளிப்பதிவாளர் சுகுமார் குறித்து பேசிய அவர், “கிராமத்தை அழகாக காட்டும் திறமை அவருக்கு ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்தப் படத்தில் கிராமத்தின் பிரம்மாண்டத்தையும், இயற்கை அழகையும் கண்கவர் வகையில் பதிவு செய்துள்ளார். டிரெய்லரிலேயே ஒவ்வொரு காட்சியும் கண்களை கவரும் வகையில் இருந்தது. என்னையும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதற்கு அவருக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.
“அருள்நிதி ஒரு ‘நம்பிக்கை நாயகன்’. அவர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றாலே, அந்தப் படத்தில் நிச்சயமாக வித்தியாசமான கதையும், தரமும் இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது. என் நண்பர்களும், குடும்பத்தினரும் கூட அதைத்தான் முதலில் சொன்னார்கள். அதற்கேற்ற வகையில் இந்தப் படத்திலும் சிறப்பான கதையம்சம் உள்ளது,” என்று பாராட்டினார்.
படத்தை வெளியிட முன்வந்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார். “இந்தப் படத்தின் அடுத்த கட்ட பயணத்திற்கு உங்கள் ஆதரவு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது,” என்றார்.
தன்னுடன் நடித்த நடிகர் ஆரவ் குறித்து பேசுகையில், “அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் நடிகர். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் மிகவும் கடினமானது. மலைகளில் ஏறி, மரங்களின் மீது ஏறி, அருவிகளின் அருகே ஆபத்தான சூழலில் பல காட்சிகளில் நடித்தார்.
ஒரு பெரிய அருவிக்குக் கீழே, கடும் குளிரில், உடல் முழுவதும் சந்தனம் பூசி நீண்ட நேரம் சமநிலையுடன் நடித்தது மிகவும் சவாலானது. ஆனால் ஒவ்வொரு நாளும் அதே அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவர் ஒரு சிறந்த சக நடிகர்,” என்று பாராட்டினார்.
நடிகை கிருத்திகாவைப் பற்றியும் அவர் பாராட்டுக்களை தெரிவித்தார். “படப்பிடிப்பின்போது பலமுறை கீழே விழுந்தும், பாறைகளில் காயமடைந்தும், எந்த தயக்கமும் இல்லாமல் தனது கதாபாத்திரத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் நடித்தார். வயதில் இளமையாக இருந்தாலும், இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவராக அவர் சிறப்பாக நடித்துள்ளார்,” என்றார்.
இறுதியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசிய ரம்யா பாண்டியன், “‘அல்லிப்பூவே’ பாடலை நான் தொடர்ந்து ‘ரிப்பீட் மோடில்’ கேட்டுக் கொண்டே இருக்கிறேன். மக்களின் மனதை எப்படித் தொட வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் பாடினாலோ, இசையமைத்தாலோ அது நேராக ரசிகர்களின் இதயத்தை சென்றடைகிறது,” என்று பாராட்டினார்

[…] […]