அமேசான் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் ஐந்தாவது மிக மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஜூன் 2026-இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஐபிஓ வெளியீட்டைத் தொடர்ந்து, நாஸ்டாக் பங்குச் சந்தையில் அறிமுகமான சில நாட்களிலேயே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 50 சதவீதத்திற்கும் மேலான அபார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இதன் மூலம், சந்தை மதிப்பில் அமேசான் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகின் ஐந்தாவது மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் உயர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் நோக்கில், “கர்சர்” என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கையகப்படுத்துவதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, நிறுவனத்தின் எதிர்கால ஏஐ உள்கட்டமைப்பு வளர்ச்சி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை மூலம், உலகளாவிய விண்வெளிச் சந்தையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பெற்றுள்ள அபார உயர்வின் காரணமாக, அதன் நிறுவனரான எலான் மஸ்க், வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை கடந்த நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் தற்போதைய வருவாய் மற்றும் லாபத்துடன் ஒப்பிடுகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வருவாய் குறைவாக இருந்தாலும், அதன் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு முயற்சிகள் மீது நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள், போட்டிப்போட்டு அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
