18 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கான இடைக்கால மாதாந்திரத் தொகை தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை புதிய விளக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)-ன் கீழ் இந்தப் புதிய திருத்தங்களும் விளக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 18 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாதாந்திரத் தொகையாக ரூ.10,000 நிலையான தொகை வழங்கப்படும். இந்த ரூ.10,000 தொகையுடன் அதற்குப் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் (Dearness Allowance) சேர்த்து அனுமதிக்கப்படும்.
TAPS-ன் முழுமையான விதிகளும் நடைமுறைகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, ஊழியர்களின் தகுதியான பணிக்காலத்தின் அடிப்படையில் உண்மையான ஓய்வூதியத் தொகை கணக்கிடப்படும். அப்போது கணக்கிடப்படும் தொகைக்கும், தற்போது வழங்கப்படும் இடைக்காலத் தொகைக்கும் இடையிலான வித்தியாசம் நிலுவைத் தொகையாக (Arrears) வழங்கப்படும்.
அதேவேளையில், 18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணிக்காலம் கொண்ட ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அவர்கள் கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 ஆகியவற்றில் எது அதிகமோ, அந்தத் தொகையுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் சேர்த்து இடைக்காலத் தொகையாகத் தொடர்ந்து வழங்கப்படும்.
தமிழக அரசின் இந்தப் புதிய விளக்கங்களும் வழிகாட்டுதல்களும் உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குப் பொருந்தாது என நிதித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நடைமுறைகள் அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (OPS) 10 ஆண்டுகள் பணிக்காலம் முடித்திருந்தாலே முழு ஓய்வூதியத்திற்குத் தகுதி என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போதைய TAPS திட்டத்தின் இடைக்கால வழிகாட்டுதலின்படி, 18 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றியவர்களுக்கு ரூ.10,000 மட்டுமே தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்புகளிடையே சில விவாதங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன.
இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் இடைக்காலத் தொகையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், 10 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகளுக்குள் பணிக்காலம் கொண்ட ஊழியர்களுக்கு 30 சதவீதம் எனக் கணக்கிடும்போது, அவர்களின் உண்மையான பணிக்காலத் தகுதியின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய தொகையைவிட இந்த இடைக்காலத் தொகை மிக அதிகமாகிவிடும் வாய்ப்பு இருப்பது அரசின் கவனத்திற்கு வந்தது.
பின்னர் இந்த அதிகப்படியான தொகையைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டால் ஓய்வூதியதாரர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால், இந்தக் கணக்கீட்டு முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காகவே 18 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றியவர்களுக்கு ரூ.10,000 என்ற நிலையான இடைக்காலத் தொகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய உத்தரவில் 6-வது ஊதியக் குழு மற்றும் 7-வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Relief) தொடர்பான விளக்கமும் இடம்பெற்றுள்ளது. 6-வது ஊதியக் குழுவின் கீழ் கடைசியாகச் சம்பளம் பெற்று, இன்னும் 7-வது ஊதியக் குழுவிற்கு மாறாத ஊழியர்களுக்கு, 2026 ஜனவரி 1 முதல் 262 சதவீத அகவிலைப்படி நடைமுறையில் உள்ளது.
அதன்படி, அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதமாகக் கணக்கிடப்படும் இடைக்காலத் தொகை ரூ.10,000-க்குக் குறைவாக இருந்தால், அது ரூ.10,000 ஆக உயர்த்தப்படும். அதே நேரத்தில், 7-வது ஊதியக் குழுவின் கீழ் வருபவர்களுக்கு இந்த இடைக்காலத் தொகையில் 60 சதவீத அகவிலைப்படி மட்டுமே கணக்கிடப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
TAPS திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்களுக்கு இந்தத் திட்டம் வேண்டாம் என்று கருதினால், அதிலிருந்து வெளியேற இரண்டு கட்ட வாய்ப்புகளை (Two-stage exit option) அரசு வழங்கியுள்ளது. TAPS விதிகள் முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஊழியர்கள் உடனடியாகத் திட்டத்திலிருந்து வெளியேறலாம். ஆனால், அவ்வாறு எடுக்கப்படும் முடிவு இறுதியானது; பின்னர் மாற்ற முடியாது.
அவ்வாறு திட்டத்திலிருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு இந்த இடைக்காலத் தொகையோ அல்லது TAPS திட்டத்தின் எதிர்காலப் பலன்களோ கிடைக்காது. அதேவேளையில், TAPS திட்டத்தின் முழுமையான விதிகள் அதிகாரப்பூர்வமாக அரசாணையாக வெளியிடப்பட்ட பிறகு, ஊழியர்கள் திட்டத்தில் தொடர்வதா அல்லது அதிலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து யோசித்து முடிவு செய்யலாம்.
இந்த இடைக்கால மாதாந்திரத் தொகை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், 2026 ஜனவரி 1 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பணியில் இருக்கும்போது உயிரிழந்த தகுதியான அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் வழங்க அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியான குடும்பத்தினருக்கு இதே விதிமுறைகளின் அடிப்படையில் இடைக்கால மாதாந்திர குடும்பத் தொகை (Interim Monthly Family Payout) வழங்கப்படும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 10 ஆண்டுகள் பணி முடித்தாலே முழு ஓய்வூதியத்திற்குத் தகுதி வாய்ந்ததாகக் கணக்கிடப்படும் நடைமுறை இருந்த நிலையில், புதிய TAPS திட்டத்தின் இடைக்கால வழிகாட்டுதலில் 18 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றியவர்களுக்கு ரூ.10,000 மட்டுமே தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜேக்டோ-ஜியோ (JACTTO-GEO) உள்ளிட்ட கூட்டமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நடவடிக்கை “ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் செயல்” என்று அவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், ஏற்கனவே 18 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான இடைக்காலத் தொகை வழங்கப்பட்டிருந்தால், அந்த அதிகப்படியான தொகை இந்த மாதம் முதல் 10 சம தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகளுக்குள் பணியாற்றிய ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் இடைக்காலத் தொகையாக வழங்கும்போது, அது அவர்களின் தகுதியான பணிக்காலத்தின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய தொகையைவிட அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.
பிற்காலத்தில் அந்த அதிகப்படியான தொகையைத் திரும்பப் பெறும்போது ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்ப்பதற்காகவே, தற்போது 10 முதல் 18 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.10,000 என்ற நிலையான இடைக்கால மாதாந்திரத் தொகையும், அதற்கான அகவிலைப்படியும் வழங்கும் வகையில் அரசு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
TAPS திட்டத்தின் முழுமையான விதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு ஊழியரின் தகுதியான பணிக்காலத்தின் அடிப்படையில் உண்மையான ஓய்வூதியத் தொகை கணக்கிடப்படும். தற்போது வழங்கப்படும் இடைக்காலத் தொகைக்கும் பின்னர் கணக்கிடப்படும் தகுதியான ஓய்வூதியத் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம் நிலுவைத் தொகையாகக் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
