செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்தவர் வீரா என்ற வீரமுத்துகிருஷ்ணன் (26). இவர் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வீரமுத்துகிருஷ்ணன் செங்கல்பட்டு பைபாஸ் பழவேலி பகுதியில் பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார்.
அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வீரமுத்துகிருஷ்ணனை சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வீரமுத்துகிருஷ்ணன் கொலை வழக்கில் நிதிஷ்குமார்(20), ஹரிஷ்(18), சூர்யா(20), ஜெயபால்(20), பரத் (22), சூர்யா (19) உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.
அதாவது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆகாஷ் என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஏரியில் புதைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் வீரமுத்து கிருஷ்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக பழிதீர்க்கும் வகையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
