Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திண்டுக்கல் மாவட்டத்தில் தவெக கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக அவர் இன்று முதன்முறையாக திண்டுக்கலுக்கு வருகை தந்தார்.

நேற்று இரவு திண்டுக்கல் வந்த அமைச்சர், நகரிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். இன்று காலை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திண்டுக்கல் ஒன்றியம் மற்றும் நகரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள், அமைச்சரை சந்திப்பதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தனர். ஆனால், அவர்களை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மா மற்றும் சில நிர்வாகிகள் அமைச்சரை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும், தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதாகவும் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படியுங்க  ஆளுநர் மாளிகை கொடுத்த நெருக்கடி.. அம்பலப்படுத்திய தவெக!

இதனால், அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சரை சந்திக்க வந்த தொண்டர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சரை சந்திக்க முடியாததால் அதிருப்தியடைந்த தொண்டர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற முயன்றனர். அப்போது, “கிழக்கு மாவட்ட செயலாளரை மாற்ற வேண்டும்”, “எங்களை அவமதித்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தொண்டர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்த தகவல் அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அனைவரையும் சந்திப்பதாக அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு காத்திருந்த தொண்டர்கள் பின்னர் அமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த சம்பவத்தால், அமைச்சர் தங்கியிருந்த தனியார் ஹோட்டல் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago