https://republictn.com/

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட (FCRA) திருத்த மசோதா – 2026-க்கு எதிராக, நாடு முழுவதும் கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த புதிய மசோதா, இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த மசோதா தேவாலயங்கள், சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகளும், சிறுபான்மையின அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன.

புதிய சட்ட வரைவின்படி, வெளிநாட்டு நிதி உதவி பெறும் ஒரு தேவாலயம் அல்லது தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் புதுப்பிக்கப்படாமல் போனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, அந்த வெளிநாட்டு நிதியின் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துகள், அதாவது பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு நியமிக்கும் “குறிப்பிட்ட அதிகாரி” தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்றும், அவற்றை நிர்வகிக்கவும், மாற்றவும் அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் வழங்கப்படுவதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சிறிய தொண்டு நிறுவனம் பெற்ற வெளிநாட்டு நிதி ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதன் FCRA உரிமம் ரத்து செய்யப்படலாம் என்ற விதி சிறிய தொண்டு நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என கத்தோலிக்க தேவாலய அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

அதேபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் அமைப்புகள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய விதியும் நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த மசோதா, இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கும், சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் சாசனப் பிரிவுகளுக்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு கட்டப் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஜூன் 28-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் “பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரத நாள்” கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 3-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய கண்டனப் போராட்டங்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர், இந்த மசோதா தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும், வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், சட்டப்படி செயல்படும் நேர்மையான தொண்டு நிறுவனங்களும், மத அமைப்புகளும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், FCRA திருத்த மசோதாவைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் சமூக விவாதம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதப் போராட்டமும், ஜூலை 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய கண்டனப் போராட்டமும் இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago