https://republictn.com/

தவெக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கிவிடும் நோக்கில் முதல்வர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் முதல் அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடத்தப்படவுள்ள முதல் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், தற்போதைய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

குறிப்பாக, இந்த மாநாட்டின் வழியே அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் மிக முக்கியமான இரு விஷயங்களை அழுத்தமாகப் பதிய வைக்கப் போகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம்
“அதிகாரிகளாகிய உங்களுக்குச் சட்டப்படி செயல்பட முழு சுதந்திரத்தை நான் வழங்குகிறேன்; மக்களுக்கு நல்லது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள்” என்பதுதான் முதல்வர் விஜய்யின் முக்கிய உத்தரவாக இருக்கப் போகிறது. அதோடு, மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையையும் அவர் விடுக்கவுள்ளார். “என் பெயரைச் சொன்னாலோ, அல்லது ஆளுங்கட்சியான நமது கட்சியின் பெயரைச் சொல்லி யாராவது உங்களிடம் வந்து நின்றாலோ, அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள். சட்டப்படி உங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று அதிகாரிகளுக்கு அவர் கண்டிப்புடன் அறிவுறுத்தவுள்ளார. ஆளுங்கட்சியினரின் தலையீடு இன்றி, நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த மாநாட்டின் மற்றொரு முக்கிய நோக்கமாக, ஒட்டுமொத்த மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகளை வேகப்படுத்துவது இருக்கும். இதில் குறிப்பாக, கடந்த தேர்தலில் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போன 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்கள் மீது ‘தனி கவனம்’ செலுத்தி, அங்குள்ள மக்கள் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தி, அதிகாரிகளின் மூலமாக அந்தப் பகுதிகளையும் தவெக-வின் பக்கம் ஈர்ப்பதற்கான வியூகங்களை வகுக்குமாறு முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முதல்வர் விஜய் எடுக்கவிருக்கும் இந்த அதிரடி முடிவுகள், வரவிருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டின் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago