https://republictn.com/

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மாற்றுக்கட்சிகளில் உள்ள பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் தவெக-வில் இணைந்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாகவே அதிமுக, திமுக, அமமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்பொழுது விஜயதரணியும் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக காங்கிரஸில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த விஜயதரணி, அங்கு தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் அவர் வழக்கமாகப் போட்டியிடும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஸ்டார் அந்தஸ்து தொகுதியில், அவர் தீவிரமாகப் போட்டியிட்ட போதிலும் தோல்வியைத் தழுவினார். பாஜகவிலும் தனக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற சூழலில், தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்களின் செல்வாக்கை நிலைநாட்டவும், அதிக இடங்களைக் கைப்பற்றவும் தவெக திட்டமிட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் விஜயதரணிக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கும், வாக்கு வங்கியும் இன்னமும் உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்த இவரைப் போன்ற வலுவான தலைவர்களை தவெக தன்பக்கம் இழுக்க முனைப்பு காட்டி வருகிறது.

அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அக்கட்சியின் நிர்வாகிகள் சவால் விடுத்துள்ள நிலையில், விஜயதரணியின் இந்த தவெக நோக்கிய நகர்வு தென் மாவட்ட அரசியல் களத்தில் தவெக-விற்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago