Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Thirumavalavan

தவெக தலைமையிலான புதிய அரசில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக எழுப்பியுள்ள கோரிக்கைகளும், அதற்குப் பதிலடியாக முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் உத்திகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன. விசிகவின் தொடர் நெருக்கடிகளுக்கு மத்தியில், அக்கட்சியை கழற்றிவிட்டு மாற்று வியூகம் அமைக்க தவெக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசிகவின் மூன்று முக்கிய டிமாண்ட்கள்
கூட்டணியில் இணைந்தது முதலே தவெக- விசிக இடையே பல்வேறு சலசலப்புகள் நிலவி வருகின்றன. தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் போன்ற ஜனநாயகக் கட்சிகளை தவெக அணுகியிருந்தது. தற்போதைய ஆட்சிச் சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் தவெக தலைமைக்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.

விரும்பிய அமைச்சர் பதவி மாற்றம்
விசிக சார்பில் வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும், அந்தத் துறை தங்களுக்குச் திருப்திகரமாக இல்லை எனக் கூறி, அதை மாற்றி வேறு ஒரு முக்கிய துறையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விசிக அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதையும் படியுங்க  விஜய் சாருடன் நடித்த சீன் காலி! தியேட்டரில் அதிர்ச்சியடைந்த ஜோடி நம்பர் 1 ஆனந்தி.. வைரலாகும் கண்ணீர் வீடியோ!

வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட தவெக தலைமை சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் தங்களுக்கு இன்னும் பல முக்கிய வாரியப் பதவிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனச் சிறுத்தைகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

திருமாவின் தர்மசங்கடம்
கூட்டணி உருவாக்கத்தின் போது, “இடதுசாரிகள் என்ன நிலைப்பாட்டை அறிவிக்கிறார்களோ, அதுவே விசிகவின் நிலைப்பாடு” என்று திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இடதுசாரிகள் தவெக ஆட்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டாலும், தங்களுக்கு அமைச்சர் பதவிகள் எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டனர். இதனால், அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்ட திருமாவளவன் அரசியல் ரீதியாக ஒரு தர்மசங்கடத்திற்கு உள்ளானார்.

விஜய்யின் மெளன செக்
திருமாவளவன் இந்த டிமாண்டுகளை முன்வைத்து காய்களை நகர்த்தி வந்தாலும், முதலமைச்சர் விஜய் இதுவரை எதற்கும் ஒப்புதல் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இது விசிக தரப்பைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, தவெக-வுக்கு விசிகவின் ஆதரவு தற்போதைக்குத் தேவை என்றாலும், அது வரவிருக்கும் இடைத்தேர்தல் வரை மட்டுமே. இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தவெக தனித்து நின்று வெற்றி பெற்றுவிட்டால், விசிக மீதான சார்புநிலை முற்றிலுமாகக் குறைந்துவிடும். அதன் பிறகு அவர்களைக் கழற்றிவிட தவெக தயங்காது என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  “கட்சி தாவலை ஊக்குவிக்கிறதா தவெக? பி. சண்முகம் சரமாரி விமர்சனம்!”

ஆனால், இடைத்தேர்தலுக்கு முன்பாகவே விசிக கூட்டணியை விட்டு வெளியேறினால், அது ஆட்சியின் இமேஜை பாதிக்கலாம் என்பதால் முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தை மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் அணுகத் திட்டமிட்டுள்ளார்.

பாமக உள்ளே?
விசிக கொடுத்து வரும் தொடர் அழுத்தங்களுக்கு மாற்றாக, பாமக-வை கூட்டணிக்குள் கொண்டு வர தவெகவின் ஒரு தரப்பு தலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. பாமக உள்ளே வந்தால் விசிகவின் நெருக்கடிகளை எளிதாக முறியடிக்கலாம் என்பது அவர்களின் கணக்கு. இருப்பினும், கடந்த காலங்களில் பாஜக-வுடன் நெருக்கம் காட்டிய பாமகவை உள்ளே இழுப்பது, தற்போதைய கூட்டணியின் தத்துவார்த்த இமேஜைக் கெடுத்துவிடும் என தவெகவின் மற்றொரு தரப்பு எச்சரிக்கிறது.

தற்போது தவெக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் போன்ற ஓரளவு இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சிந்தனை கொண்ட கட்சிகளே உள்ளன. இந்தச் சூழலில் பாமகவை உள்ளே கொண்டு வருவது, “வேலியில் போகும் ஓணானைப் பிடித்து வேட்டிக்குள் விட்டுக் கொள்வதற்குச் சமம்” என்று மூத்த நிர்வாகிகள் தவெக தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எந்தப் பக்கம் முடிவெடுப்பது என்ற குழப்பம் தவெக-விடம் நீடிக்கிறது.

இதையும் படியுங்க  “இடைத்தேர்தலில் CM Vijay-க்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்” – அன்புமணி எச்சரிக்கை

தற்போதைய இக்கட்டான சூழலைத் தவிர்க்க, விசிகவின் முக்கிய கோரிக்கைகளை தவெக தலைமை தற்காலிகமாகக் கிடப்பில் போட்டுள்ளது. விசிக தரப்பில் இருந்து மிக அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டால், தற்போதைக்கு ஒன்று அல்லது இரண்டு சிறிய கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, முக்கிய முடிவுகள் அனைத்தையும் இடைத்தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற வியூகத்தை முதலமைச்சர் விஜய் கையாண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago