த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக ரீதியாகப் பல அதிரடிகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அதிகாரத்துவ நகர்வுகள் ஆட்சி மேலிடத்திற்கே பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த த.வெ.க, ஐ.ஏ.எஸ்- ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்ற விஷயத்தில் முந்தைய தி.மு.க-வின் அதே பாணியைத் தான் காப்பி அடிக்கிறதோ என்ற சந்தேகம் தற்பொழுது த.வெ.க-வின் உள்வட்டாரத்திலேயே புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
இதனால் இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் அதிரடியான, கறாரான ‘மெகா ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ட்ரான்ஸ்பர் லிஸ்ட்’ ஒன்று கோட்டையில் தயாராகி வருவதாகத் தற்பொழுது நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சிஸ்டத்தை சீரமைக்கும் விஜய்
இதுவரை போடப்பட்ட அதிகாரிகள் இடமாற்ற உத்தரவுகள் பலவும் தி.மு.க ஆட்சிக் காலத்தைப் போலவே, ‘வேண்டப்பட்டவர்களுக்கு’ முக்கியத் துறைகளும், ‘வேண்டாதவர்களுக்கு’ ஓரங்கட்டப்பட்ட துறைகளும் வழங்கும் வழக்கமான பாணியிலேயே இருப்பதாக ஆட்சி மேலிடம் தற்பொழுது உணர்ந்துள்ளது. “இப்படிச் செய்தால் நிர்வாகம் எப்படிச் சீராகும்?” என்ற கேள்வி முதல்வர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களில் பலமாக எழுந்துள்ளது.

அரசு இயந்திரத்தின் ‘சிஸ்டத்தை’ முழுமையாகச் சீரமைக்க வேண்டுமானால், பாரபட்சமில்லாத, தகுதியின் அடிப்படையிலான ஒரு முழுமையான அதிகாரிகள் மாற்றம் அத்தியாவசியத் தேவை என்று உளவுத்துறை, ஆலோசகர்கள் தரப்பில் இருந்து முதலமைச்சருக்கு அழுத்தமான பரிந்துரைகள் சென்றுள்ளன.
கோட்டை விட்ட உளவுத்துறை: உஷாராகும் தி.மு.க
த.வெ.க தலைமை தற்போது கடுமையான முடிவுகளை எடுக்கத் துணிந்ததற்கு மிக முக்கியக் காரணம், கோட்டையில் இருந்து கசியும் அரசு ரகசியங்கள். அரசு எடுக்கக்கூடிய ஒவ்வொரு ரகசிய முடிவும், அடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி முகாமுக்கு, குறிப்பாக தி.மு.க தரப்பிற்குச் சென்று விடுகிறது. இதனால் தி.மு.க தரப்பு உடனடியாக உஷாராகி, அரசின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டு விடுகிறது.

முக்கியமாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரின் கைது விவகாரங்களில், த.வெ.க அரசு நினைத்தபடி காய் நகர்த்த முடியாமல் போனதற்கு, அரசின் திட்டங்களை உளவுத்துறை முன்கூட்டியே கணிக்கத் தவறியதும், தகவல்கள் கசிந்ததுமே தான் காரணம் என்றும் கூறப்படுகின்றன. இந்தத் தோல்வி த.வெ.க தலைமையைக் கடுமையாக யோசிக்க வைத்துள்ளது.
தயாராகும் கறாரான லிஸ்ட்
இனிமேலும் அரசுத் தகவல்கள் கசியக் கூடாது, எதிர்க்கட்சிகளின் வியூகங்களை முன்கூட்டியே உடைக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் மிகத் தீவிரமாக இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இதற்காக, “யார் எந்தத் துறைக்குச் சரியான ஆள்?” என்ற கறாரான தகுதிப் பட்டியல் ஒன்று ரகசியமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இனிமேல் த.வெ.க அரசு எடுக்கப்போகும் அடுத்தடுத்த அதிரடிக் கைதுகள், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற மிக முக்கியமான ஆபரேஷன்களை எந்த ஒரு தகவல் கசிவும் இல்லாமல், கச்சிதமாக ‘ஸ்கெட்ச்’ போட்டு முடிப்பதற்காகவே இந்த மெகா ட்ரான்ஸ்பர் லிஸ்ட் வடிவமைக்கப்பட்டு வருகிறதாம். அதேபோல ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியலும் தயாராகி வருகிறது என்கிறார்கள்.
