Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அஜித் நடித்த காதல் கோட்டை திரைப்படத்தில், நாயகனும் நாயகியும் வெவ்வேறு இடங்களில் இருந்தபடியே கடிதங்கள் மூலம் காதலித்து, பின்னர் சந்திக்கும் கதை இடம்பெற்றிருந்தது. அதேபோன்று, தெலங்கானாவில் தொடங்கிய ஒரு காதல் கதை, சென்னையில் திருட்டு சம்பவத்துடன் முடிவடைந்துள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரின் மேதிப்பட்டணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. குழந்தையின்மை மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவர் 2020 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

ஹைதராபாத்தில் ஃபேஷன் டிசைனராக பணியாற்றி வரும் அந்த பெண், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக மேட்ரிமோனியல் செயலி மூலம் வரன் தேடியபோது, ஆந்திரப் பிரதேசம் சித்தூரைச் சேர்ந்த சிவராம் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர், தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இருவரும் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி பழகிய நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், இரண்டாவது திருமண வாழ்க்கை எந்தவித பாதிப்பும் இல்லாமல் அமைய வேண்டும் என்பதற்காக, சென்னை கோவளம் அருகே உள்ள கோயிலுக்கு சென்று வழிபடலாம் என சிவராம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  அரசு விழாக்களில் மாநிலப் பாடல்களுக்கே முதலிடம்! மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு!"

அதை நம்பிய அந்த பெண், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தார். சென்னை வந்த அவரை வரவேற்ற சிவராம், கோயம்பேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, இருவரும் வாடகைக் காரில் கோவளம் அருகே உள்ள கோயிலுக்கு சென்றனர்.

அங்கு நடைபெற்ற பூஜையின்போது, நகைகளை அணிந்திருக்கக் கூடாது என்று கூறி, அந்த பெண் அணிந்திருந்த சுமார் எட்டு சவரன் தங்க நகைகளை சிவராம் பெற்றுக் கொண்டு பாதுகாப்பாக வைத்ததாக கூறியுள்ளார்.

பின்னர் இரவு நேரத்தில் இருவரும் மீண்டும் விடுதிக்கு திரும்பினர். அப்போது, ஹைதராபாத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டு, தான் சித்தூருக்கு செல்ல இருப்பதாக சிவராம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஹைதராபாத் செல்ல ரயில் டிக்கெட் எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு, சிவராம் அறையை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. செல்போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதையும் படியுங்க  மம்தாவுக்கு விழுந்த மரண அடி..! தரைமட்டமாகும் தீதி கோட்டை! டெல்லியிலும் வெடிக்கும் பிரளயம்..!

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டபோது, சிவராம் செல்போனை எடுத்து பேசியுள்ளார். அப்போது, “சாப்பாடு வாங்கிக் கொண்டு வருகிறேன். சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால் அதன்பிறகும் அவர் திரும்பி வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார்.

சிவராம், எட்டு சவரன் தங்க நகைகளுடன் மாயமானது தொடர்பாக, கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago