Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில், முள்ளிக்குப்பம் மற்றும் சீனிவாசபுரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பூர்வீகமாக வசித்து வரும் நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்,.

பாதுகாப்பான வீட்டு வசதி ஏற்படுத்த வேண்டும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், முள்ளிக்குப்பம் மற்றும் சீனிவாசபுரம் பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வருவதாகவும், அந்த நிலங்கள் தங்களது பூர்வீக வாழ்விடங்களாக இருந்தும் இதுவரை உரிய பட்டா வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். சம்பந்தப்பட்ட சர்வே எண்களில் உள்ள நிலங்களை அரசு உடனடியாக மீட்டு, சட்டப்பூர்வமாக பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Republic Tamil

மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளுக்கு உட்பட்டு, தங்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தர வீட்டு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தத் திட்டங்களும் அமல்படுத்தப்படக் கூடாது என்றும், மீனவ சமூகத்தின் உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையும் படியுங்க  "மாறப்போகிறது தமிழக சட்டம்! நாமக்கல் தம்பதிக்கு கிடைத்த மெகா நீதி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!"

இப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) கட்டியுள்ள குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், அந்தக் கட்டிடங்களில் வசிப்பது உயிருக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்தனர். எனவே, பழைய குடியிருப்புகளை உடனடியாக புதுப்பிக்கவோ அல்லது பாதுகாப்பான மாற்று வீடுகளை வழங்கவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தங்களது கோரிக்கைகள் குறித்து பலமுறை அரசுத் தரப்பிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும், குறிப்பாக மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான வெங்கட்ராமனிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், நில உரிமை தொடர்பாக அமைச்சரிடம் முறையிட்டபோது, “என் முகத்தைப் பார்த்தா ஓட்டு போட்டீர்கள்?” என்று அவர் அலட்சியமாகப் பேசியதாகவும், அந்தக் கருத்து தங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  ரேஷன் கடைக்கு விசிட் அடித்த விஐபி! டோக்கன் இல்லாமல் அரிசி மூட்டையை அள்ளிச்சென்ற மசினகுடி 'அரிசி கொம்பன்

முதலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரியதாகவும், அதற்கான அனுமதி கிடைக்காததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது ஏராளமான பொதுமக்கள் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “முதலமைச்சர் நேரில் வந்து எங்களது கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். தேவைப்பட்டால் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தவும் தயார்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.

காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் சாலையோரத்திற்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்து படிப்படியாக சீரமைக்கப்பட்டது.

எனினும், தங்களது பூர்வீக நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், பல்வேறு கட்டங்களிலும் ஜனநாயக வழியில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் மீனவர்கள் மற்றும் சீனிவாசபுரம் பகுதி மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  அடிச்சான் பாரு கோர்ட் ஆர்டர்! ஒரே நாளில் 54 பேருக்கு சீட்டு கிழிந்தது! கோவை மாநகராட்சி பகீர் பின்னணி!

பட்டினப்பாக்கம், முள்ளிக்குப்பம் மற்றும் சீனிவாசபுரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் இந்த போராட்டம், சென்னை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பூர்வீக நில உரிமை, பாதுகாப்பான குடியிருப்பு மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களையும் மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago