Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு தமிழக அரசு பல மாதங்கள் தாமதம் செய்தது குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். பின்னர், அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

Republic Tamil

இந்த உத்தரவுக்கு எதிராக, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற காரணத்தை முன்வைத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படியுங்க  வழுக்கி விழுந்ததாக நாடகம்.. பிரேத பரிசோதனையில் சிக்கிய மனைவி: சாத்தூர் கத்திக்குத்து கொலையின் பின்னணி..!

விசாரணையின்போது, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு புதிய வழக்கத்தை அறிமுகப்படுத்த முயற்சி நடைபெறுவதாக வாதிட்டார். அப்போது நீதிபதிகள், “கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றும் நடைமுறை இதற்கு முன்பு இருந்ததா?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பில், அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நடைமுறை இதற்கு முன்பு இருந்ததில்லை என்றும், தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் புதிய நடைமுறையை உருவாக்க முயற்சி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதே விவகாரம் தொடர்பாக முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவை விசாரித்தே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாகவும் கூறப்பட்டது.

Republic Tamil

இதையடுத்து, தற்போதைய நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. வழக்கை முழுமையாக விசாரித்த பின்னரே இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதையும் படியுங்க  “1330 குறளையும் ‘லைஃப் ஸ்டோரி’ மாதிரி ரசிக்க வைத்தார் அமைச்சர் ராஜ்மோகன்!”

இந்த வழக்கில் எதிர்மனுதாரரான ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதமே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்ததாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மேலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாகக் கூறி வழக்கை இழுத்தடித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, நீதிபதிகள் தமிழக அரசுத் தரப்பை நோக்கி, “ஜனவரி மாதமே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், வழக்கில் இடம்பெற்றிருந்த பல்வேறு ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டியிருந்ததால் மேல்முறையீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது தேவையான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தற்போதைய நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எந்தவித இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது என்று தெரிவித்தது.

இதையும் படியுங்க  "வெற்றியை மட்டுமே கொண்டாடும் சமூகம்… மன அழுத்தத்தைப் பேசத் தவறுவது ஏன்? கல்வி அதிபரின் மரணம் உணர்த்தும் உண்மை!"
Republic Tamil

மேலும், இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் எதிர்மனுதாரர்கள் அனைவரும் தங்களது பதிலை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இறுதியாக, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், அனைத்து தரப்பினரின் பதில்களையும் பரிசீலித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தற்போதைக்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago