ஏழை எளிய மக்களின் வயிற்றைக் கழுவ, அரசு வழங்கும் விலையில்லா ரேஷன் அரிசியை ஆந்திராவிற்குத் திருட்டுத்தனமாகக் கடத்தும் கும்பலிடம், கனிவோடு கைநீட்டி லஞ்சம் வாங்கியதோடு மட்டுமல்லாமல், ‘குற்றவாளிக்கு முன்னால் ஒரு போலி குற்றவாளியை நிறுத்து’ என்று சட்டத்தை வளைத்திருக்கிறார்கள் திருப்பத்தூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர்.
மூன்று டன் ரேஷன் அரிசி பிடிபட்ட வழக்கில், உண்மைக் குற்றவாளியைத் தப்பிக்க வைக்க ஒரு வழக்கறிஞரைத் தரகராகப் பயன்படுத்தி, வெறும் 50,000 ரூபாய்க்குப் பேரம் பேசி, காக்கிச் சட்டையின் மாண்பையே நடுத்தெருவில் ஏலம் விட்டுள்ளது ஒரு காவல்துறை கும்பல்.
“யாரையாவது ஒருவனை குற்றவாளியாகக் காட்டுங்கள், நான் மேல் அதிகாரிகளிடம் பார்த்துக் கொள்கிறேன்” என்று ஒரு பொறுப்பு அதிகாரியே பேசும் ஆடியோவில்”மாதம் மாதம் சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்குப் பல லட்சங்கள் மாமூலாகப் போகிறது” என்ற திடுக்கிடும் தகவலும், ஒட்டுமொத்தத் துறையுமே ஊழல் சாக்கடையில் மூழ்கிக் கிடக்கிறதோ என்ற நியாயமான ஆத்திரத்தைப் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரிமுத்தூர் பகுதியில் கடந்த 11.07.2026 ஆம் தேதி சரக்கு வாகனத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை திருப்பத்தூர் மாவட்ட தனிப்பிரிவு பறக்கும் படை “வட்டாச்சியர் பூங்கொடி” தலைமையிலான அதிகாரிகள் பிடித்து திருப்பத்தூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்
இதனையடுத்து பிடிப்பட்ட, குற்றவாளியான “மஞ்சு” என்பவனை இந்த வழக்கில் சேர்க்காமல் இருக்க குடிமைப்பொருள் “குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு காவலர் காதர்கான்” என்பவருக்கு ரேஷன் அரிசி கடத்தல் கும்பலிடமிருந்து 50000 ரூபாய் பேரம் பேசி அந்த பணத்தை ‘வேலூரை சேர்ந்த “வழக்கறிஞர் மோகன்” என்பவர் மூலம் GPay-வில் பெற்றுள்ளார் (பார்க்க videos -republic tn x தளம் )
இதனைத்தொடர்ந்து அந்த தரகர் வழக்கறிஞர் மோகன் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலிடம் குற்றவாளியை உறுதிசெய்ய, (மாற்றாக) வேறு ஒரு நபரை விரைவாக தெரிவிக்கும் படியும், அதை ரேஷன் அரிசி தடுப்பு பிரிவு எஸ்.பி.க்கு தெரிவிக்க வேண்டும் , அதற்கான பணத்தை உடனடியாக அனுப்பும்படி பேசும் ஆடியோவும், திருப்பத்தூர் “குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு மாவட்ட பொறுப்பு அதிகாரி மோகன்தாஸ்” யாரையாவது குற்றவாளியாக கொடுங்கள் நான் மேல் அதிகாரிகளிடம் பேசிக்கொள்கிறேன்” என ரேஷன் அரிசி கடத்தும் கும்பலிடம் சல்லித்தனமாக பேசும் ஆடியோவும் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திருக்கிறது
மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் மாதம் மாதம் பல லட்சம் ரூபாய் மாமூல் வசூல் செய்து, உயர் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து வருவது வெளியான ஆடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டிய போலீசே , அரிசி கடத்தல் கும்பலிடம் மாமூல் வாங்கிகொண்டு ஒரிஜினல் குற்றவாளிகளை காத்து அவர்களுக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்ய வைத்து போலியான குற்றவாளியை சிறையில் அடைத்துள்ளனர்
குற்றத்தைத் தடுக்க வேண்டியவர்களே, குற்றவாளிகளுக்குக் கவசமாக மாறி, அப்பாவி ஒருவரைச் சிறையில் அடைக்கத் துணிந்த இந்தத் துரோகம், “விஜய் அரசின் ‘ சட்டம்-ஒழுங்கின் மீதான நம்பிக்கையையே சுக்குநூறாக்கியுள்ளது. கடத்தலுக்கு உறுதுனையாக இருக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்து , அரசி கடத்தல் மன்னன் மஞ்சு என்பவனை சிறையில் அடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
