71 வயதான காங்கிரஸ் தலைவர் செரியன் பிலிப், தனது கட்சியை சேர்ந்த கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிந்து கிருஷ்ணாவை வலுக்கட்டாயமாக அணைக்க முயன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுதி உள்ளது.
இச்சம்பவம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கொல்லம் தொகுதியில் சமீபத்தில் வெற்றி பெற்ற பிந்து கிருஷ்ணா, தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது
பிந்து கிருஷ்ணா அங்கிருந்தவர்களைக் கைகூப்பி ‘வணக்கம்’ கூறியபடி வந்தார், செரியன் பிலிப் தன் முன் வந்தபோது, அவரிடமும் கைகுலுக்க அவர் தனது கையை நீட்டினார்.

பிந்து கிருஷ்ணா செரியன் பிலிப்பிடம் கைகுலுக்கத் தனது கையை நீட்டுகிறார். ஆனால், பிலிப் அவரது கையைப் புறக்கணித்துவிட்டு, அவரை கட்டிப்பிடிக்க முயன்றார்; அப்போது பிந்து கிருஷ்ணா மிகவும் சங்கடத்துடன் அவரை தள்ளிவிட்டு எதிர்த்தார். பிந்து கிருஷ்ணாவின் இறுக்கமான உடல்மொழியைப் பொருட்படுத்தாத பிலிப், அவர் தெளிவாக விரும்பாத நிலையிலும் அவரை வலுக்கட்டாயமாக அணைத்து இழுத்தார். இறுதியில், பிந்து கிருஷ்ணா அவரைத் தள்ளிவிட்டு, அங்கிருந்த மற்றவர்களை வரவேற்க முன்னோக்கிச் சென்றார்.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இணையவாசி ஒருவர், “இந்த நபர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இவருக்கு உண்மையில் ஏதேனும் மனநோய் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் காணொளியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஸ்ரீஜா என்பவர், “இது எவ்வளவு அருவருப்பானது. ஒரு ஆணும் பெண்ணும் பொது இடத்தில் பரஸ்பர சம்மதத்துடன் அணைத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இங்கே நடந்தது என்னவென்றால், ஒரு பெண்—அதுவும் ஒரு மக்கள் பிரதிநிதி கைகுலுக்க முன்வரும்போது, அந்த ஆண் அவரது அனுமதியின்றி வலுக்கட்டாயமாக அவரது தோள்களைப் பற்றிக்கொள்கிறார். அவர் தன்னைத் தள்ளிவிட்ட பிறகும் கூட, அந்த நபர் அவரை வலுக்கட்டாயமாக அணைக்கவே முயற்சிக்கிறார்,” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தக் காணொளி பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் கிளப்பியது. ஒருவர், “இந்த மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏ-வுக்கே பாதுகாப்பு இல்லை,” என்று கருத்து தெரிவித்தார். பலரும் செரியன் பிலிப்பை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
செரியன் பிலிப் சர்ச்சைகளில் இது ஒன்றும் புதிதல்ல. 2015-ஆம் ஆண்டிலும், ‘ ‘பெண் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் போட்டியிடுவதற்கான கட்சி வாய்ப்பை பாலியல் சலுகைகளுக்குப் பிரதிபலனாகவே பெறுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்து, அவர் பரவலான விமர்சனத்திற்கு ஆளானார்.
