தவெக தலைவர் விஜய், சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்கத் தன்னை அழைக்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், ஆளுநர் தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
“பதவியேற்பதற்கு முன்பே பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்பது ஆளுநரின் கறாரான நிபந்தனை. தவெகவிடம் தற்போது 108 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸின் 5 உறுப்பினர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 113 ஆகிறது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண்ணான 118-ஐ எட்ட இன்னும் 5 உறுப்பினர்கள் தேவை. விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டியிருப்பதும் அவருக்குக் கூடுதல் சவாலாக மாறியுள்ளது.

இந்தச் சிக்கலைத் தீர்க்க தவெக கையாண்ட விதம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக போன்ற கட்சிகளுக்குத் தவெக தரப்பிலிருந்து வாட்ஸ்அப் மூலம் கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில், ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகள் என்பது நேரில் சந்திப்பதும், சித்தாந்தங்களைப் பகிர்ந்து கொள்வதுமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், ஒரு குறுஞ்செய்தி மூலம் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு மூத்த தலைவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனை இடதுசாரித் தலைவர்கள் “ஜென்-இசட் தலைமுறையின் அரசியல்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டாலும், இது அரசியல் நாகரிகத்திற்குப் புறம்பானது என்ற வருத்தம் அவர்கள் பேச்சில் தொனிக்கிறது.

ஒருபுறம் தவெக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வரும் வேளையில், மறுபுறம் அதிமுக தனது சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. டஜன் கணக்கான அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அங்கு தனது படையினருடன் முகாமிட்டிருப்பது, தமிழகத்தில் ‘குதிரை பேரம்’ அல்லது ‘மாற்று ஏற்பாடு’ நடப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

இதுவரை தமிழக அரசியல் கற்பனை கூடச் செய்யாத ஒரு சாத்தியக்கூறுதான். தவெக பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தலுக்குப் பிந்தைய ஒரு ரகசிய உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
திமுகவின் வெளி ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்ற தகவல் அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “விஜய் ஆட்சி அமைக்கட்டும், நாம் வேடிக்கை பார்ப்போம்” என ஸ்டாலின் வெளிப்படையாகக் கூறினாலும், திராவிடக் கட்சிகள் தங்களது பிடியை நழுவவிடத் தயாராக இல்லை என்பதையே இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் காட்டுகின்றன.
