கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை முன்மொழிந்தார். இதையடுத்து, திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2023ஆம் ஆண்டு உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு அரசியல் கட்சிகள், சட்ட நிபுணர்கள், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுமார் 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான மசோதாவுக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர், அந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மசோதா மேலாய்வுக்காக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
பாஜக எம்.பி. பி. பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டுக்குழுவில், மக்களவையைச் சேர்ந்த 27 உறுப்பினர்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும் என மொத்தம் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கோவாவில் நடைபெற்ற கூட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பி. பி. சௌதரி, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான செயல்திறன் மிக்க கட்டமைப்பை உருவாக்கும் பணியில் குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதுவரை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களில் கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக தனித்தனியாக தேர்தல்கள் நடைபெறுவதால் நாட்டிற்கு சுமார் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நடைமுறைக்கு வந்தால் அந்தச் செலவுகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் காலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதால், அந்த மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களின் பொருளாதார நடவடிக்கைகள், தொழிற்துறை உற்பத்தி, சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன என்றார்.
மேலும், தேர்தல் பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், பள்ளிகளின் வழக்கமான கல்விச் செயல்பாடுகளும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, கோவா, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நாடு முழுவதும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்துவதை குறிக்கவில்லை என்றும், மாறாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒருங்கிணைத்து, பல்வேறு கட்டங்களாக நடத்தும் முறையையே குறிக்கிறது என்றும் அவர் விளக்கமளித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான உடன்பாட்டை உருவாக்கி, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான வலுவான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்காக கூட்டுக்குழு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக பி. பி. சௌதரி தெரிவித்தார்.
