https://republictn.com/

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் நடைபெறும் அரசு விழாக்களில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’, தேசிய கீதம் மற்றும் மாநில வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் வரிசை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படுவது மற்றும் இசைக்கப்படுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் இடம்பெற்றுள்ள விதிமுறைகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கிய அம்சமாக, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ முதலிடம் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு சார்பில் நடைபெறும் குறிப்பிட்ட நிகழ்வுகளின் தொடக்கத்திலும் அல்லது நிறைவிலும் தேசியப் பாடலும், தேசிய கீதமும் இசைக்கப்படும் அல்லது பாடப்படும் சூழலில், முதலில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட வேண்டும். அதன் பின்னரே தேசிய கீதம் ‘ஜன கண மன’ இசைக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் அதிகாரப்பூர்வ மாநில வாழ்த்துப் பாடல் நடைமுறையில் இருந்தால், அது தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்திற்குப் பிறகு, மூன்றாவதாக இசைக்கப்படலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் பாடப்படும் நடைமுறை இருந்து வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கவனம் ஈர்த்துள்ளன.

தேசியப் பாடல், தேசிய கீதம் மற்றும் மாநில வாழ்த்துப் பாடல் ஆகியவற்றை இசைக்கும் வரிசை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago