Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து கிளம்பியுள்ள உத்தரவு தவெக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. நாளை காலை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜரூராக நடந்து வரும் நிலையில், ஆளுநர் வைத்துள்ள ‘மெஜாரிட்டி’ செக் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக தலைவர் விஜய், இன்று பிற்பகல் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் சென்றிருந்தனர். சால்வை அணிவித்து ஆளுநர் வரவேற்றபோது நிலவிய மகிழ்ச்சி ‘ஆதரவு கடிதம்’ என்ற பேச்சு வந்தவுடன் இறுக்கமானது.

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் 118 ஆகும். தவெக வசம் தற்போது இருப்பது 108 இடங்கள் மட்டுமே. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் கொடுத்திருப்பதன் மூலம் அந்த எண்ணிக்கை 113-ஆக உயர்ந்தாலும் இன்னும் அந்த ‘மேஜிக் நம்பரை’த் தொட 5 முதல் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவசியம்.

இதையும் படியுங்க  தீர்ந்தது சிக்கல்..! விஜய்க்கு 120 ஆக உயர்ந்த ஆதரவு… பதவி ஏற்பு எப்போது தெரியுமா?

பொதுவாகத் தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும்போது, பதவியேற்ற பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் வழங்குவார். ஆனால், இந்த முறை ஆளுநர் மாளிகை எடுத்துள்ள முடிவு முற்றிலும் வேறு. “118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை முன்கூட்டியே சமர்ப்பித்தால் மட்டுமே பதவியேற்க அழைப்பு விடுக்கப்படும். பதவியேற்ற பிறகு மெஜாரிட்டியை நிரூபிக்கத் தேவையில்லை, அதற்கு முன்னரே ஆதரவை உறுதிப்படுத்த வேண்டும்” எனக்கூறியுள்ளது.

தவெக தரப்பில் சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர். தலா 2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள இந்தக் கட்சிகள், நாளைதான் தங்களது இறுதி முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளன. இந்தக் கட்சிகளின் ‘பச்சைக்கொடி’ கிடைத்தால் மட்டுமே விஜய் நாளை தமிழகத்தின் முதல்வராக அரியணையில் அமர முடியும்.

நாளை காலை 11.30 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் முதல்வராகப் பதவியேற்க விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், இன்று இரவு நடக்கும் அரசியல் சதுரங்க வேட்டை மிக முக்கியமானது. ஆளுநரின் இந்த ‘செக்’ விஜய்யின் அரசியல் பயணத்தின் முதல் சவாலாக மாறியுள்ளது. தவெக இந்த நெருக்கடியை எப்படிக் கடக்கப் போகிறது? ஒட்டுமொத்த தமிழகமும் கிண்டியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நாளை காலைக்குள் 118 என்ற இலக்கை விஜய் எட்டுவாரா என்பதே இப்போது எழும் மில்லியன் டாலர் கேள்வி!

இதையும் படியுங்க  தமிழ் உச்சரிப்பு சர்ச்சையில் மைக் ஸ்டாண்டை தட்டிவிட்டு கொதித்தெழுந்த அமைச்சர் மரிய வில்சன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago