Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான சக்சஸ் குரூப்பின் இயக்குநரான 26 வயது கேத்தன் அகர்வாலுக்கும், பி.ஜே. கோயல் அண்ட் கம்பெனி என்ற மசாலா நிறுவனத்தை கவனித்து வந்த 20 வயது வணிகவியல் கல்லூரி மாணவி சியா கோயலுக்கும், குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் சுமார் ரூ.17 கோடி செலவில் திருமணத்தை நடத்த இரு குடும்பங்களும் ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், சியா கோயல் கடந்த ஒரு ஆண்டாக கோட்வா பகுதியைச் சேர்ந்த 22 வயதான தனது கல்லூரி நண்பர் சேத்தன் பாபுலால் சௌத்ரியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காதலரைத் திருமணம் செய்து கொள்வதற்காக கேத்தன் அகர்வாலை கொலை செய்ய சியா திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 18-ஆம் தேதி மாலை, புனே அருகே உள்ள லோகாகாட் கோட்டையின் உச்சிக்குக் கேத்தனை அழைத்துச் சென்று, சுமார் 400 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தள்ளி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேத்தன் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடி தப்பிக்க முயன்ற சியா கோயலும், அவரது காதலர் சேத்தன் சௌத்ரியும் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்று வரும் விசாரணையில் தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதையும் படியுங்க  ரெட் அலர்ட் கேரளா! எபோலா வைரஸ் பீதி: திருவனந்தபுரம் ஆய்வகத்திற்கு பறந்த ரத்த மாதிரிகள்!

விசாரணையில், கேத்தனுடன் நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே சியா மற்றும் சேத்தன் யாருக்கும் தெரியாமல் மாலை மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அந்த திருமணத்திற்கு சியாவின் நெருங்கிய கல்லூரி நண்பர்கள் இருவர் சாட்சிகளாக கையெழுத்திட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கேத்தனுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தபோது, “திருமண ஷாப்பிங்” என்ற பெயரில் கேத்தனிடமிருந்து ரூ.1 கோடி பெற்ற சியா, அந்தப் பணத்தை தனது ரகசிய கணவரான சேத்தனிடம் வழங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கேத்தனை கொன்ற பிறகு அந்தப் பணத்தை பயன்படுத்தி இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜூன் 18-ஆம் தேதி கொலை நடைபெற்றதற்கு முன்பே, மே 31 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் சியா, கேத்தனை லோனாவாலா அருகே உள்ள லோகாகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்றதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக ஜூன் 14-ஆம் தேதி தனியாக கேத்தனை பள்ளத்தில் தள்ள முயன்றபோது தைரியம் இல்லாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், தனது காதலர் சேத்தன் சௌத்ரிக்கு ஸ்னாப்சாட் மூலம், “என்னால் தனியாக இதைச் செய்ய முடியவில்லை; நீயும் வா, நாம் இருவரும் சேர்ந்து அவனை பள்ளத்தில் தள்ளிவிடலாம்” என்ற பொருளில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அந்தச் செய்தியை சைபர் கிரைம் போலீசார் மீட்டெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  பதற வைக்கும் அதிர்ச்சி! அலுவலக கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த DGP.. தற்கொலையா? சதியா?

மேலும், கொலையை எவ்வாறு அரங்கேற்றுவது என்பது குறித்து புனேயின் லுல்லா நகர் பகுதியில் உள்ள ஒரு கிளப் அருகே இருவரும் நேரில் சென்று ஆலோசனை நடத்தி ஒத்திகை பார்த்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கை நேரடியாக விசாரிக்காமல், கொலை நடைபெற்ற நாளிலிருந்து பின்னோக்கிச் சென்று புலனாய்வு மேற்கொண்ட போலீசார், குற்றவாளிகளின் கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களுக்கான வாட்ஸ்அப் உரையாடல்கள், மொபைல் அழைப்பு விவரங்கள், இருப்பிடத் தகவல்கள் மற்றும் கூகுள் தேடல் வரலாறு உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை மீட்டெடுத்துள்ளனர்.

அதில், சியா மற்றும் சேத்தன் ரகசிய திருமணத்தின் போது மாலை மாற்றிக்கொண்ட புகைப்படங்களை தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.

அதேபோல், மேகாலயாவில் கணவனை பள்ளத்தில் தள்ளி கொலை செய்ததாகப் பரபரப்பை ஏற்படுத்திய ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு குறித்த தகவல்களையும் சியா கூகுளில் தேடியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கத்தி அல்லது துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தினால் தடயவியல் ஆதாரங்கள் கிடைத்துவிடும் என்பதால், விபத்து போல் காட்டுவதற்காக கேத்தனை பள்ளத்தில் தள்ளும் திட்டத்தை அவர் வகுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்டால் பெண் கைதிகளுக்கான சட்ட உரிமைகள் என்ன, போலீஸ் காவலில் பெண்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற கேள்விகளையும் சியா கூகுளில் தேடியிருப்பது டிஜிட்டல் தடயவியல் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "அந்த வீடியோ தான் க்ளூ…!" தருமபுரியில் 9-ஆம் வகுப்பு மகளையும் மனைவியையும் தீர்த்துக்கட்டிய தந்தை… லாரி முன் பாய்ந்த பகீர் பின்னணி!

தற்போதைய நிலவரப்படி, பாலிகிராப் மற்றும் பிற அறிவியல் பரிசோதனைகளுக்கு சியா மற்றும் சேத்தன் இருவரும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளனர். இதனால், இந்தக் கொலைச் சதியில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா, ரகசிய திருமணத்திற்கு இடைத்தரகர்களுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கேத்தனை கொலை செய்யத் தீட்டப்பட்ட திட்டத்தை முன்கூட்டியே அறிந்திருந்ததாகக் கூறப்படும் சேத்தனின் கல்லூரி நண்பர் ஒருவரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சியா தன்னிடம் கோட்டையின் வீடியோக்களை காட்டி கொலைத் திட்டத்தை விளக்கியதாக அவர் ஒப்புக்கொண்டதாகவும், அவரை முக்கிய சாட்சியாக சேர்ப்பதா அல்லது கூட்டுச் சதியாளராக வழக்கில் இணைப்பதா என்பது குறித்து சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் இரு குடும்பங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரன் உயிரிழந்த துயரத்தைத் தாங்க முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கேத்தன் அகர்வாலின் 71 வயதான தாத்தா தேவிசந்த் அகர்வால் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அதேபோல், சியா கோயலின் தந்தைக்கும் மாரடைப்பு ஏற்பட்டு, அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago