Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், 17 வயது மைனர் சிறுமியின் கழுத்தில் திடீரென தாலி கட்டிய இளைஞர், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாரைக் கண்டதும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “சிங்கப்பெண் அதிரடிப்படை”, களத்தில் இறங்கிய சில நாட்களிலேயே முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள தனியார் ஃபேன்சி கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாரியன் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுமி கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாரியன் தனது கையில் மறைத்து வைத்திருந்த தாலிக் கயிற்றை திடீரென சிறுமியின் கழுத்தில் கட்டியுள்ளார். பின்னர் இருவரும் அங்கேயே பேசிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை கவனித்த கடை ஊழியர் ஒருவர், உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர், சிறுமியை அழைத்துக் கொண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றனர்.

இதையும் படியுங்க  பெரியபாளையம் கொடூரம்: அமோனியா வாயு கசிவுக்கு 18 பெண்கள் பலி! 500 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிப்பு!

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் வருவதை கண்ட மாரியன், அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மைனர் சிறுமியுடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தப்பியோடிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை, இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago